புனித நோன்பு காலத்தில்
தனது உயிரைப் பறிகொடுத்த இளைஞர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - ஏ. ஷபாஅத் அஹமட் -
இன்று(15.04.2023) அதிகாலை நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தொன்றில் பரிதாபகரமாக உயிரிழந்த சாய்ந்தமருது இளைஞரின் ஜனாஸா போர்த்தப்பட்டு நடுவீதியில் கிடத்தப்பட்டுள்ள கட்சியையே காண்கிறீர்கள்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை, நான்கைந்து நாட்களுக்கு முன்னரே நோன்புப் பெருநாளுக்காக தனது குடும்பத்துடன் இணைந்துகொள்ள கட்டார் நாட்டிலிருந்து வந்தவர், பாலமுனையில் வீடுகட்டி அங்கு குடியேற எண்ணங்கொண்டு அங்குள்ள வளவைப் பார்வையிடச் சென்ற வேளையிலேயே விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.
ஒருவருடைய உயிர் குறித்த இடத்தில் கைப்பற்றப்பட வேண்டுமென்கிற இறை விதி இங்கே சாத்தியமாகியிருக்கிறது. கவலைதான் பொறுமையடைவோம்.
இந்த விபத்து நடந்திருக்கும் பிரதேசம் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான பாதையில் நிந்தவூரைச் சார்ந்ததாகும். பெரிய பாலம் எனப்படும் இடத்திலிருந்து கழியோடைப் பாலம் வரையிலான பாதை விரைந்து பயணிப்பதற்கான நீண்ட பாதையாகும். இப்பாதையில் வாகன நெரிசல்கள் ஏற்படுவதில்லை. அதனால் போக்குவரத்துச் செய்யும் எந்த வாகனமும் வேக கட்டுப்பாட்டை புறந்தள்ளி ஒரு வகையான உந்துதலில் பயணிப்பது வழக்கம்.
இந்த வேக ஓட்டமே இப்பாதையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற காரணமாயிருந்திருக்கிறது.
இனிமேல் இப்பாதையில் பயணிப்போர் நடந்தேறிய விபத்துக்களைக் கவனத்திற்கொண்டு தங்களது வாகனத்தின் வேகங்களைக் கட்டுப்படுத்தி பயணிக்கும்படி நிந்தவூர் - எனது மண் விநயமாக கேட்டுக்கொள்கிறது.
குறிப்பிடப்பட்ட பாதையின் இடைத் தூரங்களில் ஆவிகள் உலவுவதாக மிக நீண்ட காலமாக செவிவழிச் செய்திகள் கூறப்படுகின்றன.
ஏற்கெனவே நடந்த பல பரிதாபகரமான விபத்துக்களின் பெறுபேறாக இச் செய்திகள் இருந்திருக்குமோ என்கிற ஊகமும் நமக்கு ஏற்படுகிறது.
பொறுமையாகவும், நிதானமாகவும், விட்டுக்கொடுப்புடனும் பயணிப்பதால் நமக்கு நன்மையே அன்றி வேறொன்றுமில்லை.
புனித நோன்புகால வேளையில் இன்று உயிரிழந்த சகோதரனின் மறுமை வாழ்வு சிறக்கவும், அவரது இழப்பால் துயர் கொண்டிருக்கும் குடும்பத்தினரின் மன ஆறுதல்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
நன்றி: நிந்தவூர் - எனது மண்.
No comments:
Post a Comment