Recent Posts

Search This Blog

அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா? -இம்ரான் எம். பி கேள்வி

Wednesday, 19 April 2023


அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா? -இம்ரான் எம். பி கேள்வி

அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சந்தேகம் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் ஊட்கங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் 27ஆம் நாள் இரவில் புனித லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து தமது வணக்க வழிபாடுகளை முன்னெடுக்க முனைந்த நேரத்தில் அக்குறணை பகுதி பள்ளிவாயலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொலிஸாருக்கு வந்த அநாமதேய அழைப்பின் அடியாக இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு தரப்புக்கு நாம் நன்றியை தெரிவிக்கின்றோம்.

அதே நேரம் ஒரே ஒரு அநாமதேய அழைப்பு அல்லது அநாமதேய கடிதம் எந்தவொரு சமூகத்தின் விஷேட நிகழ்வுகளையும் சீர்குலைக்கும் நிலைமையை நாம் அனுமதிக்கவும் கூடாது. இதே நிலைமை நாளை ஒரு பெரஹெர நிகழ்வுக்கோ அல்லது வேறு சமய நிகழ்வுக்கோ நடக்க நேர்ந்தால் அந்த நிகழ்வுகளை நிறுத்துவது ஒருபோதும் தீர்வாக மாட்டாது. 

வலி நிறைந்த ஈஸ்டர் தாக்குதல் நினைவை மீட்டும் நாட்களில் இப்படியான மன உளைச்சலுக்குரிய நிகழ்வுகள் நடப்பது பலத்த சந்தேகத்தை தருவதும் தவிர்க்க முடியாதது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் பாரிய அரசியல் பின்னணிகொண்ட சதி இருந்ததாக இன, மத வேறுபாடின்றி மிகப்பெரும்பாலான இலங்கை மக்கள் நம்புகின்றனர்.  

அக்குறணை சம்பவத்தின் பின்னணியில் அச்சப்படும் படியாக ஏதுமில்லை என்று அரச தரப்பு அமைச்சர்கள் கூறினாலும் கூட இந்த சலசலப்பும் அதிர்வலையும் உருவாக வேண்டுமென்ற நோக்கம் இதன்பின்னணியில் உள்ளதா என்ற கேள்வி எம்மிடம் எழுவது இயல்பானதே. ஒரு சமூகத்தின் சந்தோஷத்தை சீர்குலைக்கும் விஷமத்தனம் இதன் பின்னால் உள்ளதா? அல்லது ஜனநாயக விரோதமான கொடுங்கோன்மை சட்டமான ATA எனும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட அரசு தயாராகும் நிலையில் அதற்கு தோதான சமூக நிலைமையை  கட்டமைக்கும் கைங்கர்யம் இதன் பின்னணியில் உள்ளதா? என்ற சந்தேகம் பலமாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் என்னிடம் இன்று மட்டுமே  மக்களிடமிருந்து வந்த கேள்விகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

எனவே இன, மத வேறுபாடின்றி எல்லா மக்களதும் பாதுகாப்பை உறுதிசெய்வதும் இதன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சதிகள் இருந்தால் அவற்றை முறியடிப்பதும் அவ்வாறின்றி விஷமத்தனமான பொறுப்பற்ற நடவடிக்கைகள் காணப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை அவற்றுக்கெதிராக எடுப்பதும் அரசாங்கத்தின் முன்னுள்ள முதன்மை பொறுப்புகளாகும்.


No comments:

Post a Comment