
தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த வருடம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கோயம்புத்தூருக்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தமிழகத்தின் கோவை - உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், விசாரணைகளில் ஜமேஷா முபின் தனது சகாக்களுடன் சேர்ந்து பயங்கர சதித்திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது
இதையடுத்து, தமிழக பொலிஸார் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து வழக்கு NIA எனப்படுகின்ற இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதோடு, பின்னர் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின்போது அண்மையில், உக்கடம் G.M. நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ், உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
முகமது அசாருதீன் IS ஆதரவு வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு, கேரளா மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் தேசிய புலனாய்வு முகவர் நிலைய அதிகாரிகள் கோயம்புத்தூருக்கு அழைத்துச்சென்று நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதலை முன்னெடுத்த குழுவின் தலைவரான சஹரான் ஹாசிமுடன் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சந்தேகநபர்களில் ஒருவரான முகமது அசாரூதீன் என்பவர் தொடர்புகளை பேணியுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வௌியிட்டிருந்தன.
கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவருக்கும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
No comments:
Post a Comment