Recent Posts

Search This Blog

I

Thursday, 28 September 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல், நீதித்துறைக்கும் ஜனநாயகத்துக்கு விழுந்திருக்கும் பாரிய சாட்டை அடியென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



அத்துடன், அவரது பதவி விலகலுக்கு காரணமாக அமைந்த அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள், மிகவும் மோசமான இனவாதச் செயல் எனவும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அறிக்கையில் அவர் மேலும்,


நீதிபதி சரவணராஜா கடந்த ஜூலை மாதம் 4 ஆம் திகதி தமது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி ஜூலை மாதம் 7 ஆம் திகதிய நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொதுவெளியிலும் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கியிருந்தார்.



அதன்பின்னர் குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, சட்டவரம்புகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.



இந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தமது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது. 



 இது நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கிற சாட்டையடி மட்டுமல்ல, இதை மிகமோசமான இனவாதச் செயலாகவே கருதவேண்டியுள்ளதுடன், அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.



2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திருமதி.சிறீநிதி நந்தசேகரன் மீது, இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியை அடியொற்றி, மீளவும் வடக்கின் தமிழ் நீதிபதி ஒருவர்மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகையதொரு உயிர் அச்சுறுத்தல், இலங்கையின் நீதித்துறையின் இயங்குநிலையும் மெல்லமெல்ல இராணுவமயப்படுத்தப்படுவதற்கான எத்தனமாகவே தென்படுகிறது. 



நீதித்துறையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த நாட்டில், இன, மத ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும் எத்தனை வீரியமாய் இருக்கும் என்பதுபற்றி, சர்வதேச சமூகம் இனியேனும் கூருணர்வோடு செயலாற்ற வேண்டும் என்றும், இத்தகையதொரு நிலை, இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படாதிருக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்


No comments:

Post a Comment