(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கல்வி அமைச்சில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான மேன்முறையீட்டு சபை கூடியிருந்தது. அமைச்சரினதும், செயலாளரினதும் பொறுப்பில் நடந்த அந்த கூட்டத்தின் போது மது போதையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கிருந்த அந்த சபையின் உறுப்பினர்களாக ஆசிரியர்கள் சிலரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இழுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்துள்ளனர். இது தொடர்பில் அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? சபாநாயகர் மற்றும் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை என்ன?
இப்போது ஆசிரியர்கள் பெரும் அதிருப்திக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை நீங்கள் உள்ளேயே தீர்த்துக்கொள்ளப் போகின்றீர்களா? அல்லது வீதியில் தீர்த்துக்கொள்ளப் போகின்றீர்களா? இது தொடர்பில் கல்வி அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
அந்த பொலிஸ் அதிகாரிகள் மதுபோதையில் இருந்தனரா என்று பலூன் மூலம் பரிசோதிக்கப்படுவர் என்று அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார். இதனால் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்று கூற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment