
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடமும், அவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக மன்னிப்புக் கோரினார்.
“கத்தோலிக்க சமூகம் என் மீது வெறுப்பு கொள்ளவில்லை. எனது 15 வயதில் பைபிள் படித்தேன். ஏனையவர்கள் செய்த தவறால் இன்று இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது பதவிக் காலத்தில் இது போன்ற சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
வழக்கின் மீதான நீதிமன்றத் தீர்ப்பில் தான் குற்றம் செய்ததாகக் கூறவில்லை என்றும், “ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் கடுமையான தவறு செய்தால், அந்தத் தவறுக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனை தன்னால் முடிந்தவரை நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment