*வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனும் ஆட்சியில் பங்கெடுக்கும் அடிப்படை உரிமையாகும்!*
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களது சுயாதிபத்தியத்தை வாக்குரிமை ஒன்றே தக்க வைத்துக் கொள்கிறது.
அது ஊராட்சியாக, நகராட்சியாக, மாகாண ஆட்சியாக, நாடாளுமன்றமாக இருப்பினும் தமக்குரிய பிரதிநிதிகளை மக்கள் தாமாகவே தெரிவு செய்யும் உரிமையே இந்த வாக்குரிமையாகும்.
தேசத்தை ஆளுகின்ற அரசியலைமப்பாயினும், நீதித்துறைக்கான சட்டமியற்றல்கள் ஆயினும், தேசத்தின் பொருளாதாரம், கல்வி மற்றும் இன்னோரன்ன துறைகளாயினும் கொள்கை திட்டமிடல் அமுலாக்கம் என ஒட்டு மொத்த தேசத்தின் நிர்வாகத்தையும் இந்த மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கும் பிரதான ஆயுதம் இந்த வாக்குரிமையாகும்!
வாக்குரிமை என்பது ஒரு குடிமகனின் கையில் தரப்பட்டிருக்கும் நம்பிக்கைப் பொறுப்பு அமானிதம் ஆகும்.
வாக்குரிமை சத்தியத்தின் தரப்பில் நின்று சாட்சிபகர்கின்ற தார்மீகக் கடமையாகும், அங்கு சொந்த விருப்பு வெறுப்புக்கள் பந்த பாசங்கள் நட்புறவுகளுக்கு இடமிருக்க கூடாது.
அநீதி, அக்கிரமம், அராஜகம், ஊழல் மோசடிகள், அடக்குமுறைகள், இனமதவெறி காழ்ப்புணர்வுகள், வன்முறைகள் என்பவற்றிற்கு எதிராக சாட்சிபகரும், போராடும் பிரதான ஆயுதமே இந்த வாக்குரிமையாகும்!
மக்கள் மன்றத்தில் வாக்குரிமை மூலம் பெறப்படும் முடிவுகள் மக்கள் தீர்ப்பு வழங்கும் பொறிமுறையாகும், அது, கடந்த கால ஆட்சியாளர்கள் மீதான மக்கள் தீர்ப்பு வழங்கப்படுவதற்கான ஒரே வழிமுறையாகும்.
வாக்குரிமை என்பது அதிகாரமளித்தல் ஆகும், தம்மை ஆள்வதற்கும், தம் சார்பாக சட்டங்களை இயற்றுவதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், அமுலாக்கம் செய்வதற்கும் வகாலஹ் வழங்குகின்ற நம்பிக்கை பொறுப்பளித்தல் ஆகும்.
வாக்குரிமை என்பது மொத்தத்தில் ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த அமைதி சமாதானத்தை, சமாதான சகவாழ்வை, அரசியல் ஸ்திரத் தன்மையை, பொருளாதார சுபீட்சத்தை, கல்வி கலை கலாசாரம் சுகாதாரம் சுற்றுச் சூழல் என பல்துறை அபிவிருத்தியை தீர்மானிக்கின்ற பிரதான ஆயுதமாகும்.
வாக்குரிமை எமது நிகழ்காலத்தை மாத்திரமல்ல எமது அன்பின் குழந்தைச் செல்வங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற எமது கரங்களில் தரப்பட்டுள்ள பிரதான ஆயுதமாகும்.
மக்களது சுயாதிபத்தியத்தை வாக்குரிமையை காவுகொள்கின்ற, மக்களது அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகின்ற எதேச்சதிகாரத்திற்கு எதிராக பிரயோகிக்க முடியுமான ஒரே ஆயுதமும் வாக்குரிமையாகும்!
அதனால் தான் வாக்குரிமையை அணுகுண்டினை விடவும் பலமான ஆயுதமாக சித்தரித்திருக்கின்றார்கள்!
இந்த மகத்தான வாக்குரிமையை கேவலம் சில ஆயிரம் ரூபாய்கள், அரிசி மற்றும் உலருணவு பொதிகளை இலஞ்சமாக பெற்று கருப்புச் சந்தையில் கள்வர்களிடம் விற்று விடல் ஆகுமோ!
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்புகள் பற்றி நிச்சயமாக வினவப்படுவீர்கள் என்பது இறைதூதரின் அமுதவாக்கு!
மார்க்கம் என்பது இதய சுத்தியோடு விசுவாசமாக நடத்தல் நல்லபதேசம் செய்தலாகும், அல்லாஹ்விற்குரிய கடமைகளில் உளத்தூய்மையோடு நடத்தல் அவனது தூதரை விசுவாசமாக வழிப்படல் போன்று ஆட்சியாளர்கள் விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளல், எனவும் எமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது.
அரசியலும் இராஜதந்திரமும் இந்த சமுதாயம் (உம்மத்து) பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்!
மிகச் சரியான திசையறிந்து பயணிப்போம்!
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 31.01.2023 (Share, it's an obligation!)
No comments:
Post a Comment