அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையில் சென்ற அதிகாரிகளுக்கும் அதிகாரிகள் அல்லாத தரப்பினருக்கும் நாளாந்தம் 800 அமெரிக்க டொலர் வீதம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் (22) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 800 டொலர் நிதி ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அல்லாத தரப்பினரும் இந்த வசதியின் கீழ் சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது மதசார் குழுவொன்றுக்கு சொந்தமான வீரர்களை மாத்திரம் தேர்ந்தெடுப்பதாக ஒரு கருத்துக் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் திறமைகளை வெளிக்காட்டிய கிரிக்கட் வீரர் சாமிக கருணாரத்னவைத் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்காமை குறித்த மதக் கொள்கைக்கு இணங்காமையே காரணம் என ஒரு கருத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதேபோன்று, இருபதுக்கு 20, பத்துக்கு 10 மற்றும் எல்.பி.எல். போட்டிகளை மேற்கொள்ளும் போது நிதிப் பயன்பாடு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலொன்று விளையாட்டு அமைச்சின் தலையீட்டில் நடைபெற வேண்டும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
மாகாண சபைகள் செயற்படாமையால் மாகாண மற்றும் பிரதேச விளையாட்டுக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் அது தேசிய ரீதியில் விளையாட்டு வீரர்கள் உருவாகுவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இது தொடர்பிலும் அமைச்சரின் கவனத்தை செலுத்துமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். நாடு பூராகவும் காணப்படும் பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆரம்பிக்க வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment