Recent Posts

Search This Blog

ஒரு பாலின திருமணம் செய்துவைக்குமாறு அக்கரைப்பற்றில் இரு பெண்கள் கோரிக்கை ; கேஸ் கோர்ட்டுக்கு சென்றது

Thursday, 23 June 2022


இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர், ஒரு குழந்தையின் தாயான அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்குபடி கூறியதையடுத்து இரு பெண்களையும் உள நல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அக்கரைப்பற்று பெண்ணின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உலநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தனது நண்பியைத்தேடி பெண் ஒருவர் வந்துள்ளார். தாங்கள் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்ததாகவும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் பெண்கள் கூறியுள்ளனர்.


இதனையடுத்து அக்கரைப்பற்று பெண்ணின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இரு பெண்களையும் புதன்கிழமை நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.


இருவரது விளக்கங்களையும் கேட்ட நீதிவான் இருவரும் திருமணம் செய்யக் கோரியதால் இருவரையும் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் உளநல மருத்து நிவுணரிடம் காண்பித்து அதன் அறிக்கையை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக இந்திய பெண்ணின் தொடர்பு ஏற்பட்டதாகவும் அக்கரைப்பற்று பெண் கூறினார்.


“உனக்கு திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றனர். இந்நிலையில் நீ ஏன் இந்தப் பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும்” என அக்கரைப்பற்று பெண்ணின் தந்தை தனது மகளிடம் கேட்டுள்ளார். “அந்தப் பெண்ணை திருமணம் முடிக்க விரும்புகிறேன். அவளுடன்வாழ ஆசைப்படுகிறேன். அவளை திருமணம் செய்து இந்தியாவுக்கு செல்ல விரும்புகிறேன்” மகள் தன் தந்தையிடம் கூறியுள்ளார்.


தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் தனது நண்பி மூலமாக அறிமுகமாகி தொலைபேசி, வட்ஸ்அப் ஊடாக பேசி வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்வதற்கு இணங்கிக் கொண்டதாகவும் அதன் பின் அவரை இந்தியாவுக்கு அழைத்ததாகவும் இலங்கையில் தற்போது கடவுச்சீட்டு பெறமுடியாத நிலை இருப்பதால் இலங்கைக்கு வருமாறு அவர் அந்தப் பெண்ணை அழைத்ததாகவும் கூறியுள்ளார்.


இந்நிலையிலேயே, இந்திய பெண் கடந்த 20 ஆம் திகதி இலங்கை வந்ததாகவும் தான் அவளை திருமணம் முடிக்க விரும்புவதாகவும் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே இரு பெண்களையும் உளநல நிபுணரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.



No comments:

Post a Comment