Recent Posts

Search This Blog

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தளம்பல் நிலை ... வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

Wednesday, 29 November 2023



வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலவியல் தளம்பல் நிலை காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில்

**************************** 


தென்அந்தமான் மற்றும்  வங்காள விரிகுடாவின்  தென்கிழக்குப் பகுதிகளுடன்  இணைந்த கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது  மேற்கு ‐ வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் இன்றையளவில்  மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்கிழக்குத் திசையில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடும். 


ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வு கூறல்களை கவனித்திற்கொண்டு செயற்பாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


சிலாபம் தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஒரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும். 


இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.




No comments:

Post a Comment