மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒருநாள் விவாதத்தை நடத்த வேண்டும் என்று சுயாதீன எதிரணி எம்.பியான பிவித்துறு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை நேரடியாக இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எமது நாட்டை சேர்ந்த இலட்சக் கணக்கானவர்கள் அங்கே வசிக்கின்றனர். அத்துடன் நாங்கள் தேயிலை உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கின்றோம். எரிபொருள் விலையேற்றத்தால் பாதிப்புகள் ஏற்படலாம் என்றார்.
அதேபோன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (19) சபையின் அன்றைய நாளுக்குரிய நடவடிக்கைகளை விவாதமின்றி நிறைவேற்றி, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு தொடர்பாக ஒருநாள் விவாதத்தை நடத்த வேண்டும்.
இதன்படி எங்களில் 9 எம்.பிக்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளோம் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், இந்த விடயத்தை கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment