Recent Posts

Search This Blog

கல்முனை விவகாரம் தொடர்பில் மு.கா செயலாளரின் பங்கு என்ன?

Thursday, 1 June 2023


கல்முனை விவகாரம் தொடர்பில் மு.கா செயலாளரின் பங்கு என்ன? : கிழக்கிலிருந்து நிஸாம் காரியப்பருக்கு கேள்விகள் அடங்கிய பகிரங்க கடிதம் 


கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் பெரிதாக ஒன்றுமில்லை என்றும் கல்முனை விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்ற கருத்தை அண்மையில் இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைத்து முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகமுமான நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கேள்விகள் நிறைந்த பகிரங்க கடிதமொன்றை வரைந்துள்ளது. 


அந்த கடிதத்தில் கல்முனை விவகாரத்தில் ஒன்றும் இல்லாமலா ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராக நோக்கப்படுபவரும், விவாதத்திறமை, சட்ட நுணுக்கங்கள் அறிந்த சிரேஷ்ட சட்டத்தரணியான மூத்த அரசியல்வாதி, சனாதிபதி ரணிலுடனும், அரசுடனும் உயர்ந்த உறவை கொண்டிருக்கும் எம்.ஏ. சுமந்திரன் தனது ஜூனியர்களை கூட விடாமல் நேரடியாக தானே வழக்கில் ஆஜரானார்? 24ம் திகதி நீதிமன்றில் இடையீட்டு மனுவை நிராகரிக்குமாறு கோரினார் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 


மேலும் கல்முனையை வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அரசியல் செய்வதாக கூறும் நீங்கள் கல்முனை மாநகர முதல்வராக இருந்தபோது இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம் தானே ? கல்முனை மக்களின் ஏகோபித்த தெரிவான ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் ஆகிய நீங்கள் இந்த பிரச்சினையை தீர்க்கும் வல்லமை கொண்டவர். நீங்கள் முன்வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வை கண்டிருக்க முடியும் தானே? கல்முனையை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஆன நீங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும், இங்கிருக்கும் பிரச்சினைகள் பற்றி நன்றாக தெரிந்திருந்தும் கல்முனைக்காக ஏன் நீதிமன்றம் செல்லவில்லை? 


இந்த விடயத்தில் ஸ்ரீ.ல.மு.கா தலைவர், முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களை கொண்டாவது ஏதாவது தீர்வை பெற நீங்கள் முயற்சிக்காமை இருப்பது ஏன்? கடந்த 24ம் திகதி வழங்கவிருந்த இடைக்கால தீர்வு தொடர்பில் அறிந்திருந்தும் ஏன் நீங்கள் இந்த விடயத்தில் முஸ்லிங்களுக்காக பேச முன்வரவில்லை. அப்படி முன்வந்து இடையீட்டு மனுவை மு.கா சார்பில் தாக்கல் செய்திருக்கலாமே? கல்முனை மக்களிடம் அதற்காக பணம் கேட்டிருந்தாலும் தந்திருப்பார்கள். 


இந்த வழக்கில் ஒன்றும் இல்லை என்று தெரிந்துகொண்டா எமது நாட்டின் முன்னணி சட்டவல்லுநர்களை கொண்ட இரண்டு சட்டத்தரணிகள் குழாம் இரவுபகலாக பத்திரம் தயாரித்து நீதிமன்றில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்கள் ? சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் தலையிட்டும் இடைக்கால தீர்வுவரை வந்திருப்பதை பார்க்கும் போது சிரேஷ்ட சட்டத்தரணியான உங்களுக்கு அதன் ஆபத்தை விளக்க வேண்டியதில்லை. தமிழ் தலைவர்களான எம்.ஏ.சுமந்திரனின், இரா.சம்பந்தன் போன்ற தமிழ் அரசியல்வாதிகளின் உறவை பகைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக மின்னலில் தடுமாறியதை நீங்கள் மீண்டுமொரு முறை பாருங்கள். சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் முஸ்லிங்களின் ஆபத்தை பார்ப்பார்களா? இல்லை அரச தரப்பை நியாயப்படுத்துவதை பார்ப்பார்களா? 


நீங்கள் கூறுவது போன்று இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் உங்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஹரீஸை செயலாளரான நீங்கள் மூக்குடைத்து அரசியலில் இருந்து ஓரங்கட்டஏன் இந்த பிரச்சினையை முன்வந்து தீர்க்கவில்லை? பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை விட பலம்பொருந்திய சக்தியான மு.கா தலைவர் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வை பெற செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்? ஹரீஸை அரசியலில் இருந்து ஒழிக்க கல்முனை விவகாரத்தை பூச்சியமாக்கும் கொழும்பில் வசிக்கும் நீங்கள் கல்முனை மக்களின் உணர்வுகளை அறிந்துள்ளீர்களா? கல்முனை வர்த்தகர்களின் பிரச்சினைகள் விளங்குமா? உங்கள்- ஹரீஸ் எம்.பி பகமைக்காக, தமிழ் அரசியல்தலைவர்களின் உறவை காத்துக்கொள்வதற்காக கல்முனை பலிகொடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயம் ? கல்முனை விவகாரத்தில் தமிழ் தரப்பை பகைத்துக்கொள்ள கூடாது என்று நீங்கள் தலையிடாமல் தவிர்ந்துகொண்டமையால் ஏற்பட்ட அவப்பேரை மறைக்க நீங்கள் முனைந்திருப்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என்று நம்புகிறோம்.


கல்முனை மறுமலர்ச்சி மந்திரத்தை தலைவர் ஏ.எம்.நசீர் ஹாஜி, சமூக செயற்பாட்டாளர் விரிவுரையாளர் ஏ. கலீல் ரஹ்மான் போன்ற பலரும் கல்முனைக்காக நீதிமன்றம் ஏறி இறங்கி அலைகின்ற போது உங்கள் உதவி என்னவாக இருக்கிறது ? உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாதீர்கள் ஐயா. குறைந்தது கல்முனை விடயம் தொடர்பில் உள்ள விடயங்களை கல்முனைக்கு வந்து மக்களுக்கு தெளிவாவது செய்துள்ளீர்களா? என்ற கேள்வி எங்களிடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment