நூருல் ஹுதா உமர் / எம்.எம்.அஸ்லம்)
சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார்.
ஓய்வுபெற்ற பிரதி அதிபரான இவர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராகவும்
பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராகவும் நீண்ட காலம் இருந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.
அத்துடன் சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடம் என்பவற்றின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் அவற்றின் தலைவராகவும் இருந்து அவற்றின் முன்னேற்றத்திற்காக பெரும் சேவையாற்றியுள்ளார்.
அன்னாரது ஜனாஸா சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்பினர், இளைஞர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.
காஸிம் மெளலவியின் மறைவுக்கு சாய்ந்தமருது ஷூரா சபை உள்ளிட்ட அமைப்புகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்டோரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருப்பதுடன் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை என்பன அனுதாபம் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தன.
No comments:
Post a Comment