Recent Posts

Search This Blog

IIC Kuwait-குவைத் வாழ் இலங்கையர்கள் பதினொராவது வருடமாக குவைத்தில் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான நிகழ்வு.

Wednesday, 22 February 2023

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குவைத் வாழ் இலங்கையர்களுக்கு பல வகையான சேவைகளையும் செய்து வரும் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் (IIC Kuwait) பதினொராவது வருடாந்த இரத்த தான நிகழ்வு "என்னை ஆளாக்கிய நாட்டுக்கு இரத்த தானம் செய்வோம்" (මට  නැගිටින්න අත දුන් රටට ලේ දන් දෙමු ) எனும் சுலோகத்தின் கீழ் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குவைத், ஜப்ரியா மத்திய இரத்த வங்கியில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வை இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் அஷ் ஷேய்க் ஷிராஸ் அஸீஸ் அவர்கள் இந்நிகழ்வை தலைமை தாங்கினார்கள்.


இந்த இரத்த தான நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களும், விஷேட அதிதியாக Muslim AID நிறுவனத்தின் இலங்கைக்கான மேலாளர் பைஸர் கான் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,   குவைத் நாட்டில் பணி புரியும் இலங்கை வைத்தியர்கள் குழு, குவைத்தில் இயங்கும் இலங்கை, இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதேபோல் நூற்றுக்கும் அதிகமானோர் ஜாதி, இன, மத பேதமின்றி  இரத்த தானம் செய்தனர்.


இந்த இரத்த தான நிகழ்வு குவைத் வாழ் இலங்கையர்கள் குவைத் நாட்டுக்கு  செய்யும் நன்றிக் கடனாகவும்,  எங்கள் தாய்நாட்டுக்கு செய்யும் ஒரு கெளரவமாகவும் இருந்தது. இவ்வாறான மனித நேயப் பணிகள் நாடுகளுக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தி சக வாழ்வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


உலக இரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. குவைத் மத்திய இரத்த வங்கி ஆண்டு தோறும் அதிக இரத்த தானம் செய்த சமூகங்களையும், அமைப்புக்களையும், தனி மனிதர்களையும் இத்தினத்தில் கௌரவிக்கின்றது. அந்த வகையில் 2020-2021 ஆண்டில் அதிக இரத்த தானம் செய்த இலங்கை அமைப்புக்களில் ஒன்றாக இக்ரஃ இஸ்லாமிய சங்கம் ( IIC Kuwait ) கௌரவிக்கப்பட்டது. குவைத் மத்திய இரத்த வங்கியால் இலங்கையர்கள் இவ்வாறு கௌரவப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.


இந்த நன்மையான விடயத்துக்கு பங்களிப்பு செய்த, கலந்து சிறப்பித்த, சகல விதத்திலும் உதவி ஒத்தாசைகள் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்  இக்ரஃ இஸ்லாமிய சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்வை பிரார்த்தித்து நிற்கின்றது.

Harees Salih












No comments:

Post a Comment