Recent Posts

Search This Blog

நவீன சவால்களை எதிர்கொள்ள திராணியற்ற ஆலிம்கள்!

Sunday, 26 February 2023


இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்கள் அன்று தொட்டு இன்று வரை பெரியளவில் மாற்றம் ஏதும் காணாமலேயே பயணித்து வருகின்றன.


தத்தமது கொள்கைகளை உயிர்ப்பிக்கவும், முன்னேற்றவும் அதற்கு அமைவாக ஒரு பாடத்திட்டத்தை வகுத்து பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டிய பன்னிரண்டு பதின்மூன்று வயதிற்கு உட்பட்ட  மாணவர்களை தெரிவு செய்து குறித்த தமது பாடத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி போதிக்கப்பட்டு சுமார் ஏழு எட்டு வருடங்களின் பின்னர் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.


அவ்வாறு வெளியேறுகின்ற மாணவர்களில் பெரும்பாலான மத்ரஸா மாணவர்கள் நவீன முன்னேற்றகரமான இவ்வுலகிற்கு ஏற்ப  ஆளுமையற்றவர்களாகவும் நவீன சவால்களை முறியடிக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.  


 அத்துடன் ஒரு சில மத்ரஸாக்களைத் தவிர பெரும்பாலான மத்ரஸாக்களில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்குக் கூட தயார் படுத்தப்படாத துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது. 



எனவே சாதாரண தர அறிவு கூட இல்லாத நிலையில் ஏதோ அரபு மொழியில்  வசனங்கள் அமைக்கவும் அவற்றை மொழிபெயர்க்கவும் மாத்திரம் முடியுமானவர்களாக அத்துடன் குறித்த அத்துறையில் ( அறபு மொழியில்) நிபுணத்துவமும் பெற்றிராத நிலையிலேயே இவர்கள் மத்ரஸாக்களில் இருந்து வெளியேறுகின்றனர்.



என்றாலும் வேறு துறைகளில் தமது கல்விப்பயணத்தை தொடரக் கூடிய மாணவர்கள் குறித்த அக்கால எல்லைக்குள் அவை ஓரிரு வருடகாலமாக இருந்த போதிலும் குறித்த அத் துறையில் சிறப்புத்தேர்ச்சியை அடைந்து விடுகிறனர்.


அது மட்டுமல்லாது பெரும்பாலான மத்ரஸாக்களில் கல்வி போதிக்கக்கூடிய ஆலிம்கள் அதாவது அவ்வாசிரியர்களின் கல்வித்தராதரம் கூட குறிப்பிட்ட ஒரு சாதாரண அளவிலேயே காணப்படுகின்றது.


 அதாவது அவ்வாலிம்களில் ஒரு சிலரே வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவர்களாக காணப்படுவர்.


 பெரும்பாலானோர் குறித்த மத்ரஸாவிலேயே சாதாரண அளவில் கல்வி பயின்றுவிட்டு வெளியேறி மீண்டும் அதே மத்ரஸாவில் கல்வி போதிக்கக்கூடிய ஆசிரியராக நியமிக்கப்படுகின்றனர்.
        

இம்மத்ரஸாக்களில் இருந்து  வெளியேறக்கூடிய இந்த ஆலிம்களின் மெளலவி சான்றிதழ்களைப்பொருத்த மட்டில் அவை  இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்த போதிலும் உயர் இடங்களில் அல்லது உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக அவற்றை காண்பிக்கின்ற போது அவற்றிற்கு எந்தப்பெறுமானமும் வழங்கப்படுவதில்லை.



 ஆக  இவ்வாறு வெளியேற்றப்படுகின்ற இளம் சமுதாயத்தினரின் எதிர்காலம் இன்று  பல மத்ரஸாக்களினால் வீணாக்கப்படுகின்றது என்றே கூற வேண்டும்.  


பாடசாலைகளில் தரம் ஏழு எட்டு வரை கற்ற பின்னர் ஏழு எட்டு வருடங்கள் மத்ரஸாக்களில் கல்வி பயிலும் இவர்களுக்கு எவ்வித தொழில் சார் வழிகாட்டல்களோ அதற்கான பயிற்சிகளோ வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் இவர்கள் மத்ரஸாக்களை விட்டு வெளியேறிய பின்னர், கூடிய வருமானங்களை ஈட்டித்தரக்கூடிய  தொழில்களை பெற்றுக் கொள்வது இயலாத காரியமாக மாறிவிடுகின்றது.


 எனவே விலைவாசி மிகவும் அதிகரித்து காணப்படுகின்ற இக்கால கட்டத்தில்  குறைந்த வருமானத்துடனேயே  தமது குடும்பத்தை பராமரிக்க வேண்டி ஏற்படுகிறது.      


 நானும் அரபு மத்ரஸாவொன்றில் பட்டம் பெற்று வெளியேறி அரபு மொழியில் சிறந்த புலமையை பெற்று அதன் மூலம் பல அரபுக் கவிதைகள் எழுதி , அரபு மொழியில் செய்திகள் தொகுத்தாலும் கூட அந்த அரபு மொழியையோ அல்லது அந்த சான்றிதழ்களையோ மாத்திரம் வைத்துக்கொண்டு என்னால் இதுவரையில் சிறந்த ஒரு தொழில் வாய்ப்பைக்கூட பெற்றிட முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.


 இவ்வாறு என்னை போல் கதிகலங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 


அதுமட்டுமல்லாது ஆண் சிறார்களின் எதிர்காலத்தை வீணடிக்கக்கூடிய அதே வேளை பெண்  பிள்ளைகளுக்கான மத்ரஸாக்கள் ஊருக்கு ஊர் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு அவர்களின் கல்வியும் எதிர்க்காலமும் நாசமாக்கப்பட்டு வருகின்றன.  


 கல்வியை மார்க்கக் கல்வி உலகக்கல்வி என இரண்டு வகையாகப் பாகுபடுத்தி பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அரபு மத்ரஸாக்களில் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.


 அவர்களுள் பெரும்பாலான மாணவர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழக்கூடியவர்களாகவும் பெற்றோர் பெரியோரின் வார்த்தைகளுக்கு அடிபணிந்திடாத சுட்டித்தனம் கொண்ட மாணவர்களாகவுமே இருக்கின்றனர்.    

வசதிபடைத்தவர்களின் பிள்ளைகளை மத்ரஸாக்களில் சேர்ப்பது மிகவும் அரிதாகக்காணக்கூடிய ஒன்றாகும்.


மத்ரஸாக்களை நடாத்துகின்ற பெரும் பெரும் ஹாஜியார்கள் கூட தம் பிள்ளைகளை மத்ரஸாக்களில் சேர்க்காமல் பெரும் பெரும் உயர்பாடசாலைகளிளேயே  கல்வி பயில்வதற்காக இணைக்கின்றார்கள். 


அத்துடன் மத்ரஸாக்கள் நடாத்தக்கூடிய இன்னும் சிலர் வசதியற்றவர்களாக  ஏனையோரிடம் கையேந்தியவர்களாகவே இந்த மத்ரஸாக்களை நடாத்தி வருகின்றனர். அத்துடன் மத்ரஸாக்கள் நடாத்துகின்ற வேறு சிலர் அம்மத்ரஸாக்களை முன்னிறுத்தி  தமது  சொந்த நடவடிக்கைகளை முன்னேற்றிக்கொண்டு  இருக்கின்றனர். 


எனவே இவ்வாறு பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி கவனத்திற்கொள்ளாமல் நிரந்தர வருமானம் ஏதும் இன்றி ஏனையோரிடம் கையேந்தி மத்ரஸாக்கள் நடாத்துபவர்களுக்கு  உதவி செய்வதை நிறுத்திவிட்டு மார்க்கக்கல்வியை மாத்திரம் போதிக்கக்கூடிய  மத்ரஸாக்களில் பிள்ளைகளை சேர்ப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

அத்துடன் இம்மத்ரஸாக்களில் இருந்து வெளியேறுகின்ற இம்மாணவர்களுக்கு அறிஞர் , கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி போன்ற அபார பொருள் படக்கூடிய "ஆலிம்" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.


டிப்ளோமா தரத்திலும் குறைவான இவர்களுக்கு இவ்வாறு ஆலிம் என பட்டம் வழங்குவது எந்தளவிற்கு நியாயமானது?
       
இதனை வாசிக்கின்ற உங்களில் பலருக்கு என்மீது வெறுப்பும் கோபமும் பொங்கி எழலாம்.


என்றாலும் என்னைப்போல பாதிக்கப்பட்ட பலருக்கும் இது, தனக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய  ஒரு ஆக்கமாகவே இருக்கும்  என்பதில் சந்தேகமில்லை. ஆக என்னைப் பொருத்த மட்டில் இவ்வாறான, எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாமல் நவீன அறிவியல், தொழில் நுட்ப உலகிற்கு வெகு தொலைவில் மார்க்கக் கல்வியை மாத்திரம் போதிக்கக்கூடிய மத்ரஸாக்களில் பிள்ளைகளை இணைப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே.

மௌலவி பைஸான் ஹம்ஸா (முஅய்யிதி)
தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் 1994 ஆண்டு சேர்ந்து 2002 ஆம் ஆண்டு வரை எட்டு வருடங்கள் இஸ்லாமிய கற்கை நெறியை முடித்து இறுதிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளுடன் மௌலவி பட்டம் பெற்று வெளியானவர்.


பிறந்து வளர்ந்த ஊர் : தர்கா நகர்


தற்போது தொழில் நிமித்தம் வசிப்பது : கட்டார்

27/02/2023


No comments:

Post a Comment