Recent Posts

Search This Blog

தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா? என்பது குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

Sunday, 25 December 2022


ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் தினேஷ் ஷாப்டர் தனது மாமியாருக்கு (மனைவியின் தாய்) எழுதிய கடிதத்தில் “இப்படியொரு நல்ல மகளை வளர்த்து, எனக்கு வழங்கிய என் அம்மாவுக்கு மிக்க நன்றி” போன்ற உணர்ச்சிகரமான கருத்துகள் அடங்கியிருந்தமை குறித்தும் விசாரணையாளர்கள் கூர்ந்து அவதானித்து வருகின்றனர்.

தினேஷ் ஷாப்டர் இறுதியாக பயணித்த தனது காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை என்பது CCTV காட்சிகளில் தெளிவாக ஆதாரங்கள் இருந்தாலும், காரில் இருந்தவை குறித்து நீண்ட விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் ஷாப்டர் தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்வதற்கு சில மணித்தியாலங்கள் இருந்த நிலையில், பொரளை மயானத்தில் காரில் அவரது கைகள் கட்டப்பட்டு மீட்கப்பட்டிருந்ததுடன், மயானத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐந்து மணித்தியால சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை தனது வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்தும், எதிர்பார்த்தபடி பணத்தை வசூலிக்க முடியாமல் போனதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால், நாளுக்கு நாள் தினேஷ் ஷாப்டர் நட்டமடைந்து வந்துள்ளார். தினேஷ் ஷாப்டர் சுமார் 2,000 கோடி ரூபாவை இழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வசிக்கும் கறுவாத்தோட்டம் – ப்ளவர் வீதி வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளது.

தினேஷ் ஷாப்னரின் உயிரிழப்பு தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 CCTV காணொளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன


No comments:

Post a Comment