Recent Posts

Search This Blog

மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் புடவை சிக்கியதில் பெண் பலி.... உட்பட விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.

Monday, 26 December 2022


கோப்பாய், ஹலவத்தை, கட்டான மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் புடவை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, ஹலவத்த, தித்கட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹலவத்த கொக்காவில பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கிரிஉல்ல வீதியில் கம்சபா சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்துக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹன்வெல்ல, நிட்டம்புவ வீதியில் சங்கமித்தா பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதசாரி கடவையை கடந்த பெண் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்


No comments:

Post a Comment