கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பெற்ற உலகின் தலைசிறந்த உதைபந்து அணியான அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி, உதைபந்து தரவரிசையில் பின் தங்கி இருக்கும் சவுதி அரேபியாவிடம் சாதனை வெற்றி பெறும் என்றே உதைபந்து ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலக உதைபந்து ஜாம்பவானான அர்ஜெண்டினாவை வீழ்த்தியதை சவுதி ரசிகர்கள் கோலாகளமாக கொண்டாடினார்கள். சவுதி அரேபியாவின் வெற்றியை தொடர்ந்து அந்த அணி வீரர்களுக்கு அந்நாட்டு அரசு பல பரிசுகளை வழங்க உள்ளதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின.
குறிப்பாக பல கோடி மதிப்பிலான ரோல்ஸ் ரொய்ஸ் சொகுசுக் கார்களை சவூதி அரேபிய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அந்நாட்டு அரசு வழங்க உள்ளதாக தகவல் வேகமாக பரவியது. சமூக வலைதளங்களை கடந்து ஆங்கில ஊடகங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவி வந்தது.
இந்த நிலையில் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசு என்ற செய்திக்கு சவூதி அரேபிய வீரர் சாலிஹ் அல் ஷெஹ்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று போலந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய சவூதி அரேபிய வீரர் சாலிஹ் அல் ஷெஹ்ரி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க அவர், “ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசு என்ற செய்தி தவறு. நாங்கள் நாட்டுக்காக விளையாடினோம். அர்ஜெண்டினாவுக்கு எதிரான வெற்றிதான் எங்களுக்கு கிடைத்த பரிசு” என்றார்.
No comments:
Post a Comment