அதிகாலையில், குளிர் தாங்கமுடியாது ‘குவா, குவா’ வீரிட்டு அழும் சத்தம் கேட்டதை அடுத்து விரைந்து செயற்பட்ட பொதுமக்கள், பிறந்து சிலமணி நேரங்களேயான சிசுவை மீட்டெடுத்து பொலிஸார் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்ப்பித்த சம்பவமொன்று தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், திருமணமாகாத பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..
இந்த சம்பவம், வட்டகொட யொக்ஸ்போர்ட் பிரதேசத்திலுள்ள கடையொன்றின் அருகாமையில் சனிக்கிழமை (24) அன்றி, துணிகளால் சுற்றி, தரையில் கிடந்தவாறே மீட்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் குழந்தையொன்று அழும் சத்தம் மற்றும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருகிலிருந்த கடையிலிருந்தவர், வெளி யே வந்த பார்த்துள்ளார்.
அப்போது, சிசுவொன்று இருப்பதை கண்டு, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். குளிர்தாங்க முடியாது சிசு வீரிட்டு அழுத்துள்ளது.
அதனால், அங்கிருந்தவர்களில் ஒருவர் அந்த சிசுவை வீட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பு அளித்துள்ளார். அதன்பின்னர், மேற்படி சம்பவம் தொடர்பில், 119 அவசர அம்புலன்ஸ் சேவை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நடவடிக்கை எடுத்தனர். சிசுவை மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிசு தற்போது நலமுடன் இருப்பதாக நுவரெலியா பொது வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில், அதே பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது பெண்ணுக்கு கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அப்பெண்ணை லிந்ததுலை பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment