கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்
துல்ஹஜ் மறைகிறது. முஹர்ரம் பிறக்கிறது. இஸ்லாமிய புத்தாண்டு மலர்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடையால் நாம் ஹிஜ்ரி 1443 ஐ கடந்து 1444 இல் காலடி வைக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் உலகத்திற்கு அனுப்பப்பட்ட உன்னத நோக்கத்தை அடைந்துகொள்வதில் அவர்களுக்கு சாதகமாக அமைந்த ஒரு பாரிய திருப்புமுனையான ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய புதிய வருடம் கணிக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் கி.பி. 622 இல் மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தமை ஹிஜ்ரத் என அழைக்கப்படுகிறது.
எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை அழைத்து ஒன்றுசேர்த்து ஆலோசனை கேட்டார்கள்.
அப்போது பலரும் பல மாதங்களைக் குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் ஊடாக இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளையும் அத்துமீறல்களையும் மிகைத்து தூய இஸ்லாத்தை வாழ்வில் பிரதிபலிக்கச் செய்வதற்கான புதியதொரு வாழ்க்கையை தெரிவு செய்தார்கள். அதற்கான இலட்சியப் பயணமே ஹிஜ்ரத் நிகழ்வாகும். இன்று ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய புத்தாண்டின் போதும் இதனை நினைவுபடுத்தும் நாம் எம் வாழ்வில் எத்தகைய தீய செயல்களை விட்டும் ஒதுங்கி புதிய வாழ்விற்கு எம்மைத் தயார்படுத்தியிருக்கிறோம்?
வருடத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நாம் இந்த வருடத்தில் அமைந்த செயற்பாடுகளை ஒரு கணம் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை உண்டு. எத்தனை தடவைகள் அல்குர்ஆனை ஓதி முடித்தேன்? பர்ளு தொழுகைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றினேனா? எத்தனை தடவைகள் தஹஜ்ஜத் தொழுகைகளை நிறைவேற்றினேன்? சுன்னத்தான தொழுகைகளை எந்தளவு நிறைவேற்றினேன்? எனது சொத்திலிருந்து எத்தனை ரூபாய்களை இறை பாதையில் செலவு செய்தேன்? மற்றைய சகோதரர்களுடனும் இரத்த உறவுகளுடனும் உறவுகளைப் பேணி நடந்தேனா?
மொத்தத்தில் இறைவனுக்கும் மனிதனுக்கும் நான் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை எந்தளவு நிறைவேற்றியுள்ளேன் என எமக்குள் நாம் கேட்டுக் கொள்வதோடு, செய்த பாவங்களுக்கும் தவறுகளுக்கும் அல்லாஹ்விடத்தில் மன்றாடி பாவமன்னிப்பு தேடிக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி 01 கி.பி. 622 இலிருந்து ஆரம்பிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இஸ்லாமிய ஆண்டு 1444 தோன்றுகிறது. இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி 01 ஆரம்பிக்கும் போது கிறிஸ்து ஆண்டுக்கும் இஸ்லாமிய ஆண்டுக்கும் உள்ள இடைவெளி 622 ஆண்டுகளாகும். 2022 ஆம் ஆண்டில் கிறிஸ்து ஆண்டிற்கும் இஸ்லாமிய ஆண்டிற்கும் உள்ள இடைவெளி 578 ஆண்டுகள் ஆகும். இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி ஆரம்பிக்கும் போதுள்ள இடைவெளியானது அப்படியே தொடர்வதில்லை. காலம். செல்லச் செல்ல இடைவெளி குறைந்து கொண்டே போகின்றது. காலம் செல்லச் செல்ல இடைவெளி வராது சமநிலைக்கு வந்துவிடும். அதன் பின்னர் கிறிஸ்து ஆண்டை விட இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி முந்திவிடும். அந்நிலையில் உலகில் ஹிஜ்ரி ஆண்டின் மகத்துவம் பேணப்படும் நிலைமை உண்டாகும். இந்நிலை தோன்றக் காரணம் கிறிஸ்து ஆண்டானது (ஆங்கில, தமிழ், சிங்கள வருடங்கள் ) சூரிய சுழற்சியைக் கொண்டு கணிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரியானது சந்திர சுழற்சி மூலமாக கணிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது இஸ்லாமிய வருடத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
பசி உணவைத் தேடுவதைப் போல ஈமான் அமல்களைத் தேடும். எனவே ஈமான் உறுதி அடைந்தால் அமல்கள் செய்ய வாய்ப்புக் கிடைக்கும். அமல்கள் செய்தால் ஈருலகிலும் நிம்மதி கிடைக்கும் இந்த வருடத்தை விட அடுத்த வருடம் எனது வாழ்வில் ஈமானிய மலர்கள் மலர்ந்து செழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொரு வருடமும் எம்மை விட்டு பிரிந்து செல்லும் போது எமது ஆயுட்காலம் குறைவடைந்து மரணம் எம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்வோம். பிறக்கவிருக்கும் இஸ்லாமிய புதுவருடம் ஹிஜ்ரி 1444 இல் எமக்கு மத்தியில் காணப்படும் அனைத்து பிளவுகளையும் மனக்கசப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு சகோதரத்துவத்தை, பரஸ்பர புரிந்துணர்வை தோற்றுவிப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!!
கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்.*
No comments:
Post a Comment