பள்ளிக்கூடம் முதல் பள்ளியறை வரை ஆட்டிப்படைக்கும் போதைப் பிசாசு!
போதை வஸ்துகளை வளர்ந்தவர்கள் பாவித்த காலம் கடந்து போய் இன்று சிறார்களும் பாவிக்கும் நிலை வந்து விட்டது.
போதை வஸ்துகளை இளைஞர்கள் சிறுவர்கள் மாத்திரம் பாவித்த காலம் கடந்து யுவதிகளும் சிறுமியர்களும் பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போதை வஸ்துகளை மூலை முடுக்குகளில் சந்துகளில் பாவிக்கும் காலம் கடந்து பள்ளிக் கூடங்களில், படுக்கையறைகளில் பாவிக்கும் காலம் வந்துள்ளது.
போதை வஸ்த்துக்களை அவற்றின் உண்மையான வடிவங்களில சந்தைப் படுத்தும் காலம் கடந்து விதவிதமான இனிப்பு பண்டங்கள் குளிசை மற்றும் பானங்களாக சந்தைப் படுத்தும் காலம் வந்துள்ளது.
போதை வஸ்துக்களை காடையர்கள் கழிசறைகள் விற்கும் காலம் கடந்து கற்றவர்களும் விற்கும் காலம் வந்துள்ளது.
போதை வஸ்துக்களை இளைஞர் யுவதிகள் மாணவர்கள் தேடிச் சென்ற காலம் கடந்து அவர்களை போதை வஸ்துகள் வீடு தேடிச் செல்லும் காலம் வந்துள்ளது.
போதை வஸ்துக்கள் சேரிப்புரங்களில் இருந்து கிராமங்கள் நகரங்கள் என வியாபித்து கெளரவமான குடும்பங்களை ஆட்டிப் படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாய் தந்தையரை ஏமாற்றி மிரட்டி அச்சுறுத்தி பணம்பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள் வீடுகளில உருவாகிகக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களை அவதானியுங்கள், நண்பர்கள் சகவாசம், இரவில் விழித்து பகலில் தூங்குதல், குளியலறை மலசல கூடங்களில அதிக நேரம் கழித்தல், இருளில் இருப்பதை விரும்புதல், எழுந்தால் பசி திண்டால் தூக்கம், அதிக கோபம், முரண்டு பண்ணுதல், வீட்டில் வன்முறைகள், அதிக சோர்வு, காரணமின்றி அழுதல், காரணமின்றி சிரித்தல், முகம் வெளிர்தல், முகம் வாடுதல், உடல் மெலிதல், உடல் வரட்சி, மன அழுத்தம், துப்பரவின்மை, குளிக்காமல் கைகால் முகம் அலம்பாமல் இருத்தல்...
இயன்றவரை தாய் தந்தை இருவரும் பிள்ளைகளோடு நெருக்கமாக இருக்கமாக இருத்தல், வெளிநாடுகளில் உள்ள தந்தையர் போதிய வருவாய் முதலீடு இருந்தால் குழந்தைச் செல்வங்களை காப்பாற்ற நாடு திரும்புதல், தாய்மாரை வெளிநாடுகளுக்கு அனுப்பாதிருத்தல் என சில
நகர்வுகளை மேற்கொள்தல் கட்டாயமாகும்!
மேற்சொன்ன ஏதாவது அடையாளங்கள் தெரிந்தால் உளவள துணை ஆலோசனைகளை பெறுங்கள், பிள்ளைகளை அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள், புனர்வாழ்வு நிலையங்களிடம் பாரப்படுத்துங்கள், வரட்டு கெளரவம் பார்க்காது பாதுகாப்பு தரப்புடன் ஒத்துழையுங்கள்!
ஊரான் பிள்ளைகள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என இருந்து விடாது போதை ஒழிப்பு போராட்டங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுங்கள், தவறினால் போதைப் பிசாசு கூரையைப் பிரித்துக் கொண்டு உள்ளே புகுந்து பாய்விரித்துப்
படுத்து குடும்பம் நடத்திக் குடியைக் கெடுக்கும் காலம் தொலைவில் இல்லை.
சற்று முன் என்னிடம் ஆலோசனை கேட்க வந்த இளம் தந்தை ஒருவரின் கண்ணீர் கதை கேட்ட பின் இந்த வரிகளை எழுதுகிறேன், உயர்தர பாடசாலைகளில் வகுப்புகளில் நடக்கும் செய்திகள் கலக்கம் தருகின்றன, பல பெற்றார்கள் ஆலோசனை கேட்டு அணுகுகிறார்கள், கடந்த சில மாதங்களிற்கு முன்னர் விதவை தாய்க்கு கொலையச்சுறுத்தல் விடுத்து காதில் கழுத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து வீட்டை விட்டு துரத்திய ஒரு இளைஞனின் கதையையும் ஒரு அயலவர் என்னிடம் கூறி கவலைப் பட்டார், நாளுக்கு நாள் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
20.02.2023|| SHARE || மீள்பதிவு
உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் எமதன்பின் பெற்றார்கள், உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், உறவினர்கள், ஆசான்கள் அறப்பணிகள் புரிவோரையும் நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment