Recent Posts

Search This Blog

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வயல் காணிகள் விடுதலைப் புலிகளால் பறித்தெடுத்து தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்த விடயம் பற்றி சம்பந்தன் ஐயா அமைதியாக இருப்பது ஏன்?

Thursday, 29 December 2022


கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வயல் காணிகள் விடுதலைப் புலிகளால் பறித்தெடுத்து தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்த விடயம் பற்றி சம்பந்தன் ஐயா அமைதியாக இருப்பது ஏன்?

*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்*

விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வயல் காணிகளை அடாவடித்தனமாக தமிழர்களுக்கு கையளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுப் பெற்றதன் பின்னர் நேர்மையானவர்களும் முஸ்லிம்களுடன் நல் ஐக்கியமுடையவர்களும் புலிகள் கையளித்த முஸ்லிம்களின் வயல் காணிகளை அந்தந்த வயல் காணிகளுக்குரியவர்களுக்கு அதாவது முஸ்லிம்களுக்கு கையளித்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்க விடயமாகும். இந்த விடயமானது தமிழ் அரசியல்வாதிகளின் முயற்சியில் நடந்ததல்ல.
நேர்மையான தமிழர்கள் தாங்களாகவே முன்வந்து முஸ்லிம்கள் மீது இரக்கம் கொண்டு நடந்த விடயமாகும்.
ஆனால் முஸ்லிம்களுக்குரிய வயல் காணிகளானது  கையளிக்காமல் இருப்பது பல மடங்காகும். அதாவது கையளிக்காமல் இருக்கும் வயல் காணியின் அளவு   94000 ஏக்கருக்கும் அதிகமானது என்று குறிப்பிடுகின்றனர். இந்த விடயம் நன்கு தெரிந்து வைத்திருக்கும் சம்பந்தன் ஐயா அமைதியாக ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நடந்து கொள்கிறார்.
 
 சம்பந்தன் ஐயா ஜனாதிபதியுடனான பேச்சில் அரச படையினரால்   கையகப்படுத்தப்பட்ட  தமிழர்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அது சரிதான்.                  அதே நேரம் சம்பந்தன் ஐயா கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின்  ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் காணிகளை  அடாவடித்தனமாக  விடுதலைப் புலியினர் பறித்தெடுத்து தமிழர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்தததை சரி என்று நினைக்கிறாரா? 
சம்பந்தன் ஐயா இது விடயத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா?

சம்பந்தன் ஐயா ஒரு நேர்மையான அரசியல்வாதி என்றால் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியுடனான பேச்சில் முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் தமிழர்களின்  தாய்மொழியை பேசும் முஸ்லிம்களின் அபகரித்த வயல் காணிகளை மீண்டும் முஸ்லிம்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

சம்பந்தன் ஐயாவே உங்களது சமூகத்தை சிங்கள சமூகம் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என்று நினைக்கிறீர்கள். அதே நேரம் உங்களது   சமூகம் உங்களது தாய் மொழியான தமிழை பேசும் முஸ்லிம் சமூகத்தை அடக்குமுறைக்கு உட்படுத்தலாமா? 
சம்பந்தன் ஐயா, நீங்கள்  விடுதலைப்  புலியினர் அடாவடித்தனமாக அபகரித்த  முஸ்லிம்களின் 94000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை முழுமையாக விடுவிக்க முயற்சி செய்வதே ஆரோக்கியமாகும்.
கிழக்கு மாகாணத்தில் அதிகமான  முஸ்லிம்கள்  விவசாயம் செய்து தங்களது ஜீவனோபாயத்தை நடத்தி வந்தனர். தற்போது விவசாயம் செய்வதற்கு காணியில்லாது தங்களது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லுவதற்கு சிரமப்படுகின்றனர்.   இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து முஸ்லிம்களுக்குரிய காணிகளை கையளிக்க  சம்பந்தன் ஐயா முயற்சி எடுக்க வேண்டும்.

*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்*


No comments:

Post a Comment