சில தினங்களுக்கு முன் சுற்றுலா சென்று நீரில் மூழ்கி வபாஃத் ஆகிய ஒரு சகோதரனின் செய்தி இவ்வாறு பதிவாகியிருந்தது:
அவர் பலாஹ் மஸ்ஜிதை நோக்கி நடக்கும் பொழுது அதானுக்குரிய நேரமாகிவிட்டதை நாம் அறிந்து கொள்வோம்!
பர்ழான தொழுகைக்குப் பின் நபிலான தொழுகையை திக்ரு அவ்ராத் துஆக்களை முடித்து விட்டு அவர் வெளியே வர சுமார் 15 நிமிடங்கள் ஆகின்றன!
21 வயதேயான அவரது வயதில் 60 வயதுடைய ஒருவரது நெற்றியில் இருக்க வேண்டிய ஸுஜூதுடைய அடையாளம் இருக்கும்!
எப்பொழுதும் வஞ்சகமில்லா புன்னகையுடன் ஸலாம் சொல்லி மலர்ந்த முகத்துடன் கதைக்கும் பண்புடையவராக இருந்தார்!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து நல்லமல்களை அங்கீகரித்து பர்ஸக் வாழ்வை சுவனத்தின் நந்தவனமாக ஆக்கி வைப்பானாக!
ஒவ்வொருவரது முடிவையும் அல்லாஹ் ஒருவனே அறிவான், யார் எங்கு எப்போது எப்படி எந்த நிலையில் மரணிப்பார் என்பதையும் அவர்கள் பற்றிய இறுதித் தீர்ப்பையும் எம்மால் கூற முடியாது ..!
என்றாலும் நாளை மஹ்ஷரில் அர்ஷின் நிழல் பெறும் ஏழு பேரில் மஸ்ஜிதுகளோடு உள்ளங்கள் பிணைக்கப்பட்ட இளைஞர் பற்றி கூறப்பட்டுள்ளது.
சுவனவாசிகளின் நெற்றியில் ஸஜூது செய்ததன் அடையாளங்கள் பிரகாசிப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
மரணித்துவிட்ட ஒருவர் பற்றி மக்கள் சொல்லும் அழகிய சாட்சியங்கள் அவர்கள் சுவனவாசிகள் என்பதற்கான அடையாளங்கள் என்பதனை அறிவோம்.
பர்ழான கடமைகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் நபிலான வணக்கங்கள், திக்ரு அவ்ராதுகள் தரும் இம்மை மறுமை ஈடேற்றங்கள் பற்றியெல்லாம் நாம் அறிவோம்!
நற்பண்புகள் உள்ளோர் நாளை கியாமத் நாளில் இறைதூதர் (ஸல்) அவர்களது அருகாமை பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான பண்புகளையுடைய ஒரு உண்மை விசுவாசியாக இளம்வயதில் வளர்வதும் வாழ்வதும் எத்தகைய பேறு என்பதனை நாம் அறிவோம்.
அதுவும் அனைத்துவிதமான அநாச்சாரங்களும் இன்டர்நெட் சமூக ஊடகங்கள் என கையடக்கத்தில் ஆகிவிட்ட ஒரு யுகத்தில் ஷைத்தானுடன் தன் மனோ இச்சைகளுடன் போராடி மார்க்கப் பற்றுடன் வளர்வதும் வாழ்வதும் எத்தகைய சவால்மிக்க காரியமாகும் என்பதையும் நாம் அறிவோம்.
இளம் மரணங்கள் எமக்கு ஆயிரமாயிரம் பாடங்களை கற்றுத் தருகின்றன, அதிலும் இவ்வாறான மரணங்கள் ஆழமான பல படிப்பினைகளை விட்டுச் செல்கின்றன.
இந்தப் புனிதமான ரமழான் மாதத்தில் எம்மை சுயவிசாரணைக்கு உட்படுத்தி எமது ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகளில் அதிக கரிசனை செலுத்தவும் எமது வழமையான வாழ்வில் மாற்றங்களை கொண்டுவரவும் நாம் முயற்சிக்க வேண்டும்.
யா அல்லாஹ் எம்மை விட்டு பிரிந்து செல்லும் உனது நல்லடியார்களுக்கு நீ வழங்குகின்ற நற்கூலிகளை எமக்கும் தந்தருள்வாயாக, அவர்களுக்குப் பின் எம்மை சோதனைகளுக்கு ஆளாக்கி விடாதே!
யா அல்லாஹ், ஹுஸ்னுல் காதிமா எனும் சிறந்த வாழ்நாள் முடிவை எம்மனைவருக்கும் நீ தருவாயாக!
யா அல்லாஹ், எமது பெற்றார்கள் உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர், ஆசான்கள், அறப்பணி புரிபவர்கள் அன்பிற்குரியவர்கள் அனைவருக்கும் இந்த ரமழான் சுமந்து வரும் அனைத்து இம்மை மறுமை பேறுகளையும் நிறைவாகத் தருவாயாக!
இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்
https://www.youtube.com/user/drinamullahphd?sub_confirmation=1
✍️ 25.03.2023
No comments:
Post a Comment