பாடசாலைகளில் முதலாம் தரத்திலிருந்தே ஆங்கில மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி பெரிதும் வரவேற்றிருப்பதுடன் இது எதிர்காலத்தில் இளைஞர்கள் சர்வதேச ரீதியில் பல தொழில்வாய்ப்புக்களை பெற உதவும் எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
நமது நாட்டு கல்வி மொழியாக ஆங்கில மொழியை பிரகடனப்படுத்த வேண்டும் என்பதை எமது கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
எவர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் ஆங்கில மொழி என்பது சர்வதேசரீதியில் மக்களின் தொடர்பாடல் மொழியாகிவிட்டது. குறிப்பாக இன்றைய தொழில் நுட்பத்துறைக்கு ஆங்கிலம் அவசியம் என்றாகிவிட்டது.
நமது நாட்டின் சுதந்திரத்துக்கு முன் ஆங்கில மொழி, பாடசாலை மொழியாக இருந்ததால் நாடு முன்னேற்றம் பெற்றது. பின்னர் வந்த அரசியல்வாதிகள் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்ததால் மொழிச்சண்டை எற்பட்டதுடன் இளைஞர்களின் சர்வதேச தொடர்பாடலும் குறைந்தது.
பின்னர் பண வசதி கொண்டோரின் பிள்ளைகள் ஆங்கில சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று முன்னேற சிங்கள, தமிழ் மொழி பாடசாலைகளில் கற்பது ஏழைகளுக்குரியதாக ஆகிவிட்டது.
இவ்வாறான நிலையில் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்தே ஆங்கில பேச்சு மொழி கற்பித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளமை பெரிதும் பாராட்டுக்குரிய விடயமாகும். இது தொடர்ந்தால் நமது நாட்டின் இனங்களுக்கிடையிலும் ஆங்கில மொழி, தொடர்பாடல் மொழியாகுவதுடன் இன்னும் பத்து அல்லது இருபது வருடங்களில் நமது நாட்டு இளைஞர்கள் சர்வதேச ரீதியில் சிறந்த தொழில்வாய்ப்புக்களை பெற வழி வகுக்கும்.
No comments:
Post a Comment