Recent Posts

Search This Blog

அடுத்த வருடம் நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் - மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது ; விவசாய அமைச்சர்

Thursday, 14 September 2023


எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும்; முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது – கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர


அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,

“கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் நம்நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று நிலைமையும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி குறைந்ததன் விளைவாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறைந்தது.

சுமார் 3,420,000 புதிய கோழிக் குஞ்சுகள் தற்போது கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலும், அந்தக் கோழிகள் டிசம்பர் மாதத்திற்குள் முட்டையிடும் பருவத்திற்கு வளர்ந்துவிடும். எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என குறித்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் எமது மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
இடைக் கால, கால்நடை அபிவிருத்தித் திட்டத்தின் படி, வட மாகாணத்தில் கால்நடை வளத்தை மேம்படுத்தும் பணிகளை வலுவூட்டுவதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 37 மில்லியன் ரூபாவாகும்.

சிறிய மற்றும் நடுத்தரக் கோழிப் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாள் வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்குதல், கிராமப்புறங்களில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் போசாக்கை அதிகரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 48 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக, உள்நாட்டுக் கோழி இறைச்சி உற்பத்தி 30% சதவீதத்தினால் குறைந்துள்ளது.

ஆனால், தற்போது பிராய்லர் கோழிக் குஞ்சுகள் அதிக அளவில் பண்ணைகளுக்கு சேர்க்கப்படுவதால், இந்த ஆண்டு இறுதிக்குள், நம் நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தி, முந்தைய நிலைக்கு திரும்பலாம் என, குறித்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது.


No comments:

Post a Comment