
தானோ தனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரச நிதியினை பயன்படுத்தி ஹஜ் பயணம் மேற்கொள்ளவில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.
பேசா எனப்படும் இலவசமாக வழங்கப்படும் விசாவில் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீலின் குடும்ப உறுப்பினர்கள் ஹஜ் கடமைக்காக சென்றமை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..
நானும் கௌரவ சுற்றாடல் துறை அமைச்சர், ஹாபிஸ் நசீர் அவர்களும் இலங்கை ஹஜ் குழுவின் அப்போதைய தலைவர் அஹ்கம் உவைஸ் ஹாஜியார் அவர்களும், கௌரவ புத்தசாசன சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர், விதுர விக்கிரமநாயக்க அவர்களின் வேண்டுகோளின் பேரில் இலங்கை உத்தயோகபூர்வ ஹஜ் தூதுக்குழுவில் சென்றோம். இந்த தூதுக்குழுவுக்கு கௌரவ அமைச்சர் நசீர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக தலைமை தாங்கிச் சென்றோம்.
இலங்கையிலிருந்து செல்லும் உத்தியோகபூர்வ ஹஜ் தூதுக்குழு உறுப்பினர்களுக்கும் அந்த தூதுக்குழுவில் செல்லும் அரசியல் பிரமுகர்களின் துணைவியருக்கும் பேஸா எனப்படும் Free Movement Pass வழங்கப்படுவது சம்பிரதாயமாகும்.
இதற்கு முன்னைய வருடங்களிலும் ஹஜ் தூதுக்குழுவில் சென்ற அரசியல் பிரமுகர்களுக்கும் குறிப்பாக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சலுகையும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
பேஸா விசா என்றால் ஹஜ் புனித யாத்திரைக்கான விசாவிலிருந்து விதிவிலக்கும் தடையின்றி மக்கா, மதீனா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களுக்கு பயணிக்க முடியும். இதைத் தவிர வேறு எந்த சலுகைகளும் பண வசதிகளும் வழங்கப் படுவதில்லை.
கடந்த காலங்களில் ஹஜ் தூதுக்குழுவில் சென்றவர்களுக்கு விமான பயணச்சீட்டு, மக்கா, மதீனா போன்ற இடங்களில் தங்குமிட வசதி என்பன ஹஜ் நிதியிலிருந்து செலவழிக்கப்பட்டதுடன் அலவன்ஸுகளும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன.
2022ஆம் வருட ஹஜ் தூதுக்குழுவில் சென்ற எங்கள்
மூவருக்கும் எந்தவிதமான செலவுகளும் அரச நிதியிலிருந்தோ அல்லது ஹஜ் நிதியிலிருந்தோ செலவழிக்கப்படவில்லை. நாங்கள் உத்தியோகபூர்வ தூதுக்குழு உறுப்பினர்களாக சென்றபோதும், விமான பயணச்சீட்டு, தங்குமிட வசதி போன்ற அனைத்து செலவுகளும் எங்களது சொந்தப் பணத்திலேயே செலவழித்தோம்.
இன்னும் சொல்லப்போனால், இதுவரை காலமும் இலங்கையிலிருத்து சென்ற எந்தவொரு ஹஜ் தூதுக்குழு உறுப்பினரும் தமது சொந்தப் பணத்தில் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை என்பதையும் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
எனது மகனும் மருமகளும் 2022 ஆம் ஆண்டில் ஹஜ் செய்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் “அல் அக்ஸா ஹஜ் பயண நிறுவனம்” மூலம் முழு ஹஜ் கட்டணத்தையும் செலுத்தி சாதாரண ஹாஜிமார்களைப்போல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றினர். எந்தவிதமான அரச சலுகைகளையும் அவர்கள் இருவரும் அனுபவிக்கவில்லை.
இது சம்பந்தமாக மேலும் விபரங்கள் தேவைப்படுமிடத்து, அப்போது முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அன்சார் ஹாஜியார் அவர்களையோ
அல்லது இலங்கை ஹஜ் குழுவின் தலைவராக அப்போதிருந்த அஹ்கம் உவைஸ் ஹாஜியார் அவர்களையோ தொடர்பு கொண்டு உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும்.
ஊடகங்களில் வெளியிடப்படுள்ள இணையதள செய்தியும் அதன் தலைப்பும், நானும் எனது குடும்பமும் கடந்த வருட ஹஜ் விடயத்தில் ஒரு மோசடியில் ஈடிபட்டுள்ளதுப்போல் ஒரு பிழையான - மோசமான - பாரதூரமான அபிப்பிராயத்தை நமது சமூகத்தில், எனக்கும் என் குடும்பத்துக்கும் எதிராக ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி,எனது பொது வாழ்வுக்கும், சமூகத்தில் எனக்கும் என குடும்பத்துக்கும் உள்ள நற்பெயருக்கும் பாரிய களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment