Recent Posts

Search This Blog

தான் இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற நீதிமன்றத்தை நாடுகிறார் முஜிபுர் ரஹ்மான்.

Saturday, 15 July 2023


உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாவிட்டால் தமக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இது குறித்து எமது செய்தி சேவை வினவிய போது அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து தனது சட்டத்தரணியுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் சம்பளத்தை மீள வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறாயின் தமக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அது தொடர்பான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் பின்னர், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏ.எச்.எம்.பௌசிக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, மக்களின் வாக்குரிமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் இன்றி செயற்படுவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment