ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி உள்ள வாக்னர் எனப்படும் தனியார் இராணுவக்குழு, தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழியில், அந்த படையின் வாகனங்கள் மீது இராணுவம் குண்டுகளை வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‛வாக்னர் ' எனப்படும் தனியார் இராணுவக் குழுவும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
ஆனால், இந்த குழுவினர் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். பெரிய ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் இந்த குழு, பணம் பெற்று தாக்குதல் நடத்தும் கூலிப்படையாகவும் செயல்படுகிறது.
சமீபகாலமாக தங்கள் மீது அடக்குமுறை செயல்படுத்தி வருவதாக இந்த குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் கூறியிருந்தார். உக்ரைன் போரின் போதும் தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து சாவதற்கு கூட தயாராக உள்ளதாக கூறிய அவர், ரஷ்யாவை கட்டாயம் வீழ்த்துவோம். பல பகுதிகளை கைப்பற்றியதாக தெரிவித்தார். ரஷ்ய மக்களும் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இந்த குழுவானது, ரோஸ்டாவ் ஆன் டான் நகரில் உள்ள இராணுவ தலைமையகத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமையகத்தில் இருந்து யெவ்ஜெனி பிரிகோஸ் வெளியிட்ட வீடியோவில், தனது படைகள், விமானத் தளம் உள்ளிட்ட இராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நகரில் 10 இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நகர நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, வாக்னர் குழு தலைவரை கைது செய்ய உத்தரவிட்ட ரஷ்ய ஜனாதிபதி புட்டின் , குழுவினரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தார். இந்த குழுவினரின் செயல் முதுகில் குத்துவதற்கு சமம் எனவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இந்த வாக்னர் குழுவினர் மொஸ்கோவை நோக்கி முன்னேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் துவங்கி உள்ளதாகவும், தங்கள் பாதையில் இராணுவத்தினர் குறுக்கிட வேண்டாம் எனவும் அந்த அமைப்பினர் கூறியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அக்குழுவின் வாகனங்கள் மீது இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. தலைநகர் மொஸ்கோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அழிவின் பாதையை தேர்வு செய்தவர்களுக்கு அழிவு நிச்சயம். உக்ரைனில் எத்தனை நாள் படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவிற்கு ஏற்படும். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்



No comments:
Post a Comment