சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிபிட்டிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிபிட்டிய - மஹாபலஸ்ஸ பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமாக பயணித்த பாரவூர்தியொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மீறிய பாரவூர்தி சாரதி, காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்தியபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் பாரவூர்தியிலிருந்த மாடுகளை காட்டுப் பகுதியில் விடுவித்து, வீரகட்டிய பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்போது, காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்தனர். சம்பவத்தில் பாரவூர்தியில் இருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு முன்னதாகவே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாரவூர்தியிலிருந்த மேலும் மூவரை காவல்துறையினர் கைது செய்ததுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பசுவொன்று கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, பாரவூர்தியை துரத்திச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர்களின் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்திய கார் ஒன்று தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment