Recent Posts

Search This Blog

கல்முனையன்ஸ் போரம், பெருந்தலைவர் அஸ்ரப் மீது குற்றசாட்டு

Friday, 12 May 2023


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும் இந்த உப செயலக பிரச்சினைக்கு அவரது காலத்தில் தீர்வைப்பெற உரிய சூழ்நிலை இருந்தும் அவர் அந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரவில்லை என்று பொருள்பட கல்முனையன்ஸ் போரத்தின் தவிசாளர் றிசாத் செரீப் தனது முகப்புத்தகத்தில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவினூடாக புதிய தலைமுறையும், இளைஞர்களும் தலைவர் அஸ்ரப் மீது வைத்திருக்கும் மரியாதையையும், அபரிதமான நம்பிக்கையையும் சிதறடித்து தலைவர் அஷ்ரபை கலங்கடிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும் . 


தலைவர் அஸ்ரப் என்பவர் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாலும் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள், சகல முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளினாலும் அரசியல் மாமேதையாகவும், அரசியல் தீர்க்கதரிசியாகவும், சமூகம் சார்ந்த போராளியாகவும், சமூக விடயங்களில் எவ்வித துரோகங்களையும் செய்யாதவராகவும் அடையாளப்படுத்தப்பட்ட பெருந்தலைவர் ஆவார். றிசாத் செரீபின் முகநூல் பதிவினூடாக அவரா தனது சொந்த தொகுதி, சொந்த மண்ணுக்கு, சொந்த இனத்திற்கு துரோகம் செய்துள்ளார் என்று வரலாறு தெரியாத இளைஞர்களும், இந்த தலைமுறையினரும் கேள்வி கேட்கிறார்கள். உண்மையில் றிசாத் செரீப் அவர்கள் உள்நோக்கத்தில் வரலாறு தெரிந்தும் வரலாற்றை திருப்படுத்தி எழுதியுள்ளார். அவருக்கான பதிலாக, 


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் 1989 மே 12 இல் உருவாக்கப்பட்ட போது தலைவர் அஸ்ரப் எதிர்க்கட்சி ஆசனத்தில் சாதாரண எம்.பியாகவே இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கல்முனை தொகுதி ஆளும்தரப்பு எம்.பியாகவும், இந்த நாட்டின் சக்திவாய்ந்த துறைமுகங்கள் கப்பல்துறை வர்த்தக வாணிப அமைச்சராகவும் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களே இருந்தார். கௌரவ மன்சூர் அவர்கள் தான் கல்முனையின் அபிவிருத்தி, நிர்வாகம் போன்றவற்றை கையாண்டவர். அவரை மீறி கல்முனை விடயத்தில் அரச அதிகாரிகளினாலோ, அரச இயந்திரங்களினாலோ எந்த முடிவையும் எடுக்கமுடியதளவில் சக்திமிக்கவராக இருந்தார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தமிழ் தரப்பு பெற முற்பட்ட போது கௌரவ மன்சூர் அவர்கள் எதிர்க்கவில்லை. 25 ஆயிரம் மக்கள் உள்ள தமிழ் தரப்பிற்கு 29 கிராம சேவகர் பிரிவுகளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமும் உருவாக்கி கொடுக்கப்பட்டது. இதில் முஸ்லிங்களுக்கு நடந்த கொடுமை என்னவென்றால் முஸ்லிங்களின் நகர், வர்த்தக நிலையங்கள், காணியில் 70% நிலங்கள், பிரதான சந்தை, கிராமங்கள், பள்ளிவாசல், அரச நிறுவனங்கள் எல்லாம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக கிராம சேவக எல்லைக்குள் உள்வாங்கப்பட்டது. 


இந்த பெரும் அநியாயத்தை அரசாங்கமும் தமிழ் மக்களின் தலைவர்களும் இரவோடிரவாக செய்தபோது கௌரவ மன்சூர் அவர்கள் எதிர்க்காமல் முழுமையான ஒத்துழைப்புக்களை வாங்கியதே வரலாறு. அது மட்டுமின்றி கல்முனையில் வாழும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிங்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள் தான். அதுமட்டுமல்ல கல்முனைக்கு கல்முனை குடி என்றும் தமிழ் அதிகாரிகளினால் வஞ்சகமாக பெயர் சூட்டப்பட்டது. அதனையும் கௌரவ மன்சூர் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். சில சகோதர்கள் அது சட்டவிரோத செயலகம் என்று கல்முனை சந்திகளில் கூச்சலிட்டு கொண்டிருக்கிறார்கள். 


சகோதரர்களே ! 


கல்முனை வடக்கு உப பிரதேச செயலக ஆவணங்கள் அதிகாரபூர்வமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் 1989 மே மாதமே உருவாக்கப்பட்டு விட்டது. இதனால் தான் தமிழ் தரப்பு இப்போது வழக்குக்கும் சென்றுள்ளார்கள். இதுமட்டுமல்ல 1993.07.28ம் திகதி அமைச்சரவையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அன்றைய அமைச்சரவையில் கலந்துகொண்டிருந்த கௌரவ மன்சூர் அவர்கள் இந்த தரமுயர்வுக்கு எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. அவரும் சேர்ந்துதான் அந்த அனுமதியை பெற்றுக்கொடுத்தார். ஏனெனில் 1993 இறுதிப்பகுதில் கல்முனை பிரதேச சபை தேர்தல் நடக்கவிருந்தது. அதில் 12 ஆயிரம் தமிழ் வாக்குகளை தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழர்களுடன் முன்னெடுக்கப்பட்ட டீல் ஆகவே இதனை செய்தார். அவர் எதிர்பார்த்தது போன்று கல்முனையில் தலைவர் அஷ்ரபை தோற்கடிக்க கல்முனை தமிழர்கள் 12 ஆயிரம் பேரளவில் மன்சூரின் யானைக்கு வாக்களித்தது வரலாறு. 


இவ்வாறு பெரும் அநீதியை தனது சொந்த மண்ணுக்கு கௌரவ மன்சூர் அவர்கள் செய்தும் கூட தலைவர் அஸ்ரப் அவர்கள் அன்றிருந்த ஜனாதிபதி டீ .பி. விஜயதூங்கவை சந்தித்து மன்றாடி அந்த அமைச்சரவை தீர்மானத்தின் படி வெளியாகவேண்டிய வர்த்தமானியை வெளிவராமல் தடுத்தார். அந்த நேரத்தில் தனது ஆளுமையால் கல்முனையை காப்பாற்றியவர் தலைவர் அஸ்ரப் தான். இப்படியாக உண்மையும், வரலாறும் இருக்கும் போது சகோதரர் றிசாத் செரீப் அவர்கள் வரலாற்றை திரிவுபடுத்தி தலைவர் அஸ்ரபிற்கு கலங்கம் உண்டாக்கியுள்ளார். அன்று கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கவில்லை மாறாக அரசாங்கம் உருவாக்கிய விடயம். கொழும்பு உள்நாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், தமிழ் மக்களுக்காக 29 கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்கி ஆவணங்கள் தயாரித்து ஒப்பமிட்டு உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறான அநீதி இடம்பெற்ற போது அமைச்சரவையில் இருந்த கௌரவ மன்சூர் அவர்கள் கூட இந்த அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க முன்வராததால் கல்முனை மண்ணில் 35 வருடங்களாக ஒவ்வொரு நாளும் அச்சத்துடனையே கடந்து கொண்டிருக்கிறது. இப்போது இறுதியாக தமிழ் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 


கல்முனை முஸ்லிங்களின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் கல்முனை மாநகரில் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியுமா? அரச காரியாலயங்களில் சுதந்திரமாக நியாயமாக சேவைபெற முடியுமா? எமது சந்ததிகள் சந்தகேணியில் அச்சமின்றி விளையாட முடியுமா? கல்முனை மாநகரம் எங்களின் மாநகரம் என்பதை இழந்துவிடுவோமோ என்று ஒவ்வொரு நாளும் அச்சத்துடனையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான ஒரு நேரத்தில் சகோதரர் றிசாத் செரீப் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வரலாறுகளையும், உண்மைகளையும் திரிவுபடுத்த கூடாது. 


கல்முனை இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி.

07C, கடற்கரை வீதி, 

கல்முனை.



No comments:

Post a Comment