இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இரு பிரதான
கட்சிகளே ஆட்சி செய்து வந்துள்ளன. ஒரு கட்சியில் வெறுப்படையும் பொழுது மற்ற கட்சிக்கு வாக்களிப்பதையே மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். தேர்தல் முடிந்ததும் தோல்வியடைந்த கட்சியில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றியடைந்த கட்சிக்குத் தாவி தன் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வார்கள். இதுவரை மக்கள் மூன்றாம் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவருவதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் இப்பொழுது சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்றாம் சக்தி ஒன்றை ஆட்சிக்குக் கொண்டு வருவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் தீர்க்கமான தேர்தலாகவே இந்த தேர்தல் இருக்கப் போகிறது.
இந்த தேர்தலில் இரு பிரதான கட்சிகளினதும் தாய்க்கட்சிகளான UNP, SLFP என்பன இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போவோம் என்ற நிலையிலேயே இருக்கின்றன. பிரதான கட்சிகளில் SLPP ஐ எடுத்துக்கொண்டால் சொந்த கொடியின் கீழ் போட்டியிடுவது அவர்களுக்கு அசெளகரியமாகவே இருக்கிறது.
எனவே தீவிர ஆதரவாளர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு, தாம் போட்டியிடவில்லை என்றால் தமக்குதாமே மக்கள் ஆதரவு இல்லை என்பதை ஏற்றுக்கொண்டதாகி விடும் என்பதால் தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், அவர்களின் தேர்தல் வியூகமாக ஆதரவுக்கட்சிகளிலும் சுயேட்சைகளிலும் தம் வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்துள்ளனர்.
இதை பஷில் ராஜபக்ஷ நேரடியாகவே ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார். தன் ஆதரவுக்கட்சிகளிலும் சுயேட்சைகளிலும் தம் வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்வதன் மூலம் தமக்கு ஆதரவாக இருந்து தற்போது வெறுப்படைந்திருக்கும் வாக்காளர்கள் வேறு பக்கம் சாய்ந்துவிடாமல் பாதுகாத்து, பின்னர் எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் தம் பக்கம் திருப்பிக்கொள்வதே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கின்றது. அதே நேரம் கிடைத்ததைச் சுருட்டிக்கொள்தல். அதாவது முடியுமான அளவு தம் வேட்பாளர்களை ஏனைய கட்சிகள், சுயேட்சைகள் மூலம் வெற்றிபெறச் செய்து உள்ளூராட்சி சபைகளில் தம் இருப்பை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் இவர்கள் SLPP உடன் சேர்ந்து செயற்படுவார்கள்.
இத்தேர்தலில் நேரடியான போட்டி என்றால் SJB மற்றும் NPP என்பவற்றுக்கு இடையேவே இருக்கப் போகிறது. இங்கு SJB இன் பலம் அவர்களுக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது.
ஆனால் NPP ஐப் பொருத்தவரையில் JVP இற்கு இருக்கும் ஒரு சிறிய வாக்கு வங்கியைத்தவிர NPP இற்கு என்று ஒரு வாக்கு வங்கி இல்லை. ஆனால் அவர்களின் பலமே மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான்.
மக்கள் இரண்டு பிரதான கட்சிகளின் மீதும் வெறுப்படைந்து மூன்றாம் சக்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடைவெளியை NPP இனால் மட்டுமே நிரப்ப முடியும். எனவே மக்கள் அவர்கள் பக்கம் சாய ஆரம்பித்திருக்கிறார்கள். அத்துடன் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களித்தவர்களில் ஒரு கணிசமானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது system change. அவர்கள் இப்பொழுதும் அந்த system change ஐ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் தெரிவு NPPயாகவே இருக்கப் போகிறது. இவ்விடயங்கள் வாக்கு வங்கி ஒன்று இல்லை என்ற குறையை நீக்கப் போகிறது.
இப்பொழுது நாம் SJB vs NPP போட்டியில் எப்பக்கம் இருக்கப் போகிறோம்? உறவினர்கள் கேட்கிறார்கள், நண்பர்கள் கேட்கிறார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்தில் வாக்களிக்கப் போகிறோமா? அல்லது எமது எதிர்கால சந்ததியினரை நினைத்து தேசிய அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர பங்களிக்கப் போகிறோமா? இது ஒரு அரிய வாய்ப்பு இதைத் தவறவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு வருமா என்பது சந்தேகமானதே.
சிந்தித்து வாக்களிப்போம், மாற்றத்தின் பங்காளியாவோம்.
✍️ Shafraz Buhary



No comments:
Post a Comment