தர்மங்களில் உயர்ந்தது பசித்தோருக்கு உணவளித்தல் என்பதனை எல்லோரும் அறிவோம், ஏழை எளியவருக்கு அனாதை விதவைகளுக்கு விஷேட தேவையுடையோருக்கு உதவுதல் ஈருலக ஈடேற்றத்திற்கு காரணமாகின்ற அறம்சார் நற்கருமங்கள் ஆகும் என்பதனை அறிவோம்.
அல்குர்ஆனிலும் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாக்கிலும் வாழ்விலும் அத்தகைய தான தர்மங்களை ஸதக்கா, ஸக்காத்து, இன்பாஃக், இத்ஆம், இஃப்தார், என்று பல பெயர்களில் வலியுறுத்தப்படுவதையும் அவற்றினால் விளையும் இகபர நன்மைகளையும் எடுத்துக் கூறியிருப்பதனை அறிவோம்.
பசித்தோருக்கு உணவளிப்பீர், உறவுகளை சேர்ந்து நடப்பீர், நடுநிசியில் மனிதர்கள் துயில் கொள்ள நீர் எழுந்து தொழுவீர், தடைகளேதுமின்றி சுவனம் செல்வார் என்பது நபிமொழி.
பக்கத்து வீட்டான் பசித்திருக்க வயிறார உண்டுகளிப்பவன் என்னை இறைதூதராக விசுவாசித்தவன் ஆக மாட்டான் என்றும் ஒரு ஈச்சம் பழத்தின் பாதியை தர்மம் செய்தேனும் நரகிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் இறைதூதர் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு ஒட்டகை, ஒரு மாடு, ஒரு ஆடு என வழமையாக குர்பானி செய்யப்பட்டு ஏழை எளியவருக்கு உணவளிப்பதனை சதகாவாகவோ, உழ்ஹிய்யாவாகவோ, நேர்ச்சையாகவோ, குற்றப் பரிகாரமாகவோ ஊக்குவிக்கும் கட்டாயப்படுத்தும் சன்மார்க்கம் அவற்றை உயரிய வணக்க வழிபாடுகளாகவே கற்றுத் தந்திருக்கிறது.
Subscribe our channel:
ஜும்ஆத் தொழுகைக்கு நேரகாலத்தோடு குளித்து தயராகி வருவோருக்கு தரப்படும் அதி உயர் சன்மானங்கள் குறித்து குறிப்பிட்ட இறைதூதர் ஸல் அவர்கள் அவர்கள் வரும் நேர ஒழுங்கில் ஒட்டகை, மாடு, ஆடு, கோழி என்பவற்றை தர்மம் செய்த நன்மையைப் பெறுவர் என கூறியபோது இறுதியாக ஒரு முட்டையை தர்மம் செய்த நன்மையை என்றும் குறிப்பிட்டார்கள்.
பொதுவாகவே ஸக்காத் சதக்காவில் நாம் முட்டை தானத்தை குறைந்த விலை காரணமாக குறிப்பிடத்தக்க ஒரு தர்மம் ஆக பார்ப்பதில்லை!
ஆனால், இன்றைய சூழலில் நாட்டில் போசாக்கின்மை அதிகரித்து மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி, மீன் போன்ற சத்துணவுகளை மத்தியதர வர்க்கத்தினராலும் ஈடுகொடுக்க முடியாத நிலையில் நிவாரண உணவுப் பொதிகளில் முட்டையையும் சேர்த்துக் கொள்வது குர்பானிகளின் வரிசையில் சேருகின்றது என்பதில் சந்தேகமில்லை!
குறிப்பாக போசாக்கின்மையால் குழந்தைகள் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் ஒரிரு முட்டைகளை வாங்க முடியாத நிலையில் தவிக்கும் ஏழை எளியவர்கள் வீடுகளிற்கு இரகசியமாக ஐந்தாறு முட்டைகளை யும் சேர்த்து உணவுப் பொதிகளை வழங்குவதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதனையும் சதக்காக்களின் போசாக்குள்ள குர்பானிகளின் வரிசையில் சேர்த்து எமக்கு கற்றுத் தந்த எம் உயிரிலும் மேலான தலைவர் உத்தமர் நபி முஹம்மத் மீது என்றென்றும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் உணாடாவதாக!
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍🏻 10.11.2022



No comments:
Post a Comment