Recent Posts

Search This Blog

மூவின மக்களுக்கும் சம அந்தஸ்து கொடுத்தால் நாடு முன்னேறும் சாத்தியம் I

Wednesday, 20 July 2022


கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்

ஒரு ஆசனத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பிரதமராகி, ஜனாதிபதியுமாகிவிட்டார் ரணில் விக்ரமசிங்ஹ .
எந்தக் காலத்திலும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் எமது நாட்டை சீரான நிலைமைக்கு கொண்டு வந்து சிங்கப்பூர் நிலைமைக்கு உயர்த்த வேண்டும்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தினாலான குடிசைகளைக் கொண்ட மீனவக் கிராமங்களை உள்ளடக்கியதுதான் சிங்கப்பூர். ஆனால் இன்று பல நூற்றுக்கணக்கான தொடர் மாடி வீடுகள், விரைவான கடுகதி பெருந்தெருக்கள் காணப்படுகின்றன.

சிங்கப்பூர் அபிவிருத்தியில் ஜப்பானுக்கு அடுத்த இடத்திலுள்ளது.

1950 களில் அரசியல் தலைவர்கள் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக லண்டன் செல்வதற்கு நேரடி விமான சேவையில்லை. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் இலங்கை வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு நேரடியாக விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதான் அன்றைய சிங்கப்பூர் நிலைமை. ஆராய்ந்து பார்த்தால் எமது நாடான இலங்கைதான் முதலில் சிங்கப்பூர் நிலைமைக்கு வந்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் நிலைமையை நாங்கள் அடையவில்லை. மாறாக படுபாதாளத்தில் எங்களது நாட்டின் நிலைமையுள்ளது.

எந்தக் கனிவளமும் இல்லாத, குடிநீருக்கு கூட வெளிநாட்டை நம்பியிருக்கும் நாட்டை வியந்து போற்றும் அளவுக்கு அபிவிருத்தியில் ஜப்பானுக்கு அடுத்த இடத்திலும் ஆசியாவில் முதல் நிலையிலும் காணப்படுவதற்கு காரணம்தான் என்ன? என ஆராய்ந்த போது கிடைத்த முத்துக்கள்தான் இந்த விடயங்கள்.

ஒன்றுமில்லாத நாட்டை வியந்து போற்றும் அளவுக்கு உயர்த்தியவர் சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ ஆவார். இவர் ஒரு சீனர். இவர் சிங்கப்பூரில் செய்த முதல் காரியம்தான் சிங்கப்பூர் இந்த நிலைமைக்கு வரக் காரணம். அந்தக் காரியத்தை எமது நாட்டு அரசியல் தலைவர்கள் செய்திருந்தால் நாம் இந்த நிலைமைக்கு படுபாதாள நிலைமைக்கு தள்ளப்படாமல் சிங்கப்பூர் நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

சிங்கப்பூரில் சீனர்கள் , மலாய் இனத்தவர்கள், தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ அவர்கள் பிரதமரானதும் முதல் செய்த காரியம் சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம அந்தஸ்தும் மத நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளித்தார். இந்தக் காரியத்தினால்தான் வறியநாடு இந்தளவுக்கு முன்னேறக் காரணம் என ஆராய்ந்து முடிவெடுத்துள்ளனர் அரசியல் ஆய்வாளர்கள்.

எமது நாடு 1948 இல் சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாட்டு அரசியல் தலைவர்கள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய இனங்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே முறுகல் நிலையை தோற்றுவித்து மத நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் சீர்குலைத்து அரசியல் செய்து வந்தனர். இந்தக் காரியத்தினால்தான் நாம் படுபாதாள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

எந்தக் காரியத்தினால் சிங்கப்பூர் முன்னேறியதோ அதே காரியத்தை நாம் பின்தொடர்ந்தால் நாம் சிங்கப்பூரையும் மிஞ்சலாம். எனவே புதிய ஜனாதிபதி மூவினத்துக்கும் சம அந்தஸ்து கொடுத்தும் மத நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்.*


No comments:

Post a Comment