"அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்.... லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்.... அல்லாஹு அக்பர்..... வலில்லாஹில் ஹம்து" தக்பீர் முழங்குகிறது. பிறக்கிறது ஈதுல் அழ்ஹா.
கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்
தியாகப் பெருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் உதயமாகிவிட்டது. தக்பீர் முழங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சுலோகம்தான் இனிய தக்பீராகும்.
“அல்லாஹு அக்பர்.....அல்லாஹு அக்பர்.....லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்....அல்லாஹு அக்பர்...வலில்லாஹில் ஹம்து.....”
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பமே நம் மனக்கண் முன் நிழலாடும். இஹ்ராம் கட்டுதல், கஃபாவை வலம்வருதல், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல், ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடுதல், புனிதம் நிரம்பிய ஸம்ஸம் நீர் அருந்துதல், அரபாவில் தரித்தல், குர்பான் கொடுத்தல், மினாவில் கல்லெறிதல் போன்ற அனைத்து கிரியைகளிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகம் பிரதிபலிக்கின்றன.
புனித ஹஜ் கடமையானது இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையாகும். வசதி படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த செல்வந்தர்கள் அனைவரும் கண்டிப்பாக புனித ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும். சக்தியிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றாமலிருப்பது பெரும் குற்றமாகும்.
ஹஜ்ஜுக்கான ஒன்றுகூடல், முஸ்லிம் உம்மத்தின் ஐக்கிய உணர்வை பறைசாற்றும் சர்வதேசளவிலான வருடாந்த மாநாடாக கணிக்கப்படுகிறது. தொழுகையில் ஆரம்பிக்கும் முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் ஹஜ் ஒன்றுகூடலில் மேலும் வலுப்பெறுகிறது.
நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வாழ்ந்த ஜாஹிலிய்யா காலத்து மக்கள் கூட இவ்வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். இணைவைப்போடு மூட நம்பிக்கைகளும் அனாச்சாரங்களும் நிறைந்த ஒரு வழிபாடாகவே இது இருந்து வந்தது. இது ஒரு வழிபாடு என்பதை விடவும் அரேபிய தீபகற்ப மக்கள் ஒன்றுகூடும் வியாபார சந்தையாகவே திகழ்ந்தது என்றால் மிகையாகாது.
நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் இந்நிலை முற்றாக மாற்றப்பட்டு இணைவைப்பும் மூட நம்பிக்கைகளும் அனாச்சாரங்களும் முற்றாக அகற்றப்பட்டு வருடாந்தம் ஒன்றுகூடும் சர்வதேச இஸ்லாமிய சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளடக்கிய மாநாடாக அமையப்பெற்றது.
அல்லாஹ்வின் கட்டளையை இதயத்தில் இறுக்கமாய் கொண்டு, எத்தனையோ காலங்களாக “இல்லையே தமக்கொரு பிள்ளை” என ஏங்கித் தவித்து இன்னல் பல கண்டு இறுதியில் அன்புடனும் ஆசையுடனும் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக பலியிடத் துணிந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் உயர்வான, ஒப்பற்ற மனதையும், ஒரு மாபெரும் தத்துவத்தையும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.
புனித ஹஜ் பெருநாள் தினத்திலும் அதைத் தொடர்ந்துவரும் துல்ஹஜ் மாதம் 11,12,13 ஆகிய தினங்களிலும் வசதியுள்ள ஒரு முஸ்லிம் நிறைவேற்றும் மிகச் சிறந்த வணக்கமே உழ்ஹிய்யா (குர்பான்) கொடுப்பதாகும். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற மிருகங்களை அறுத்து தானும் உண்டு பிறருக்கும் புசிக்கக் கொடுத்து அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நற்செயலே உழ்ஹிய்யா ஆகும்.
ஸகாத் கொடுப்பவர்கள்தான் உழ்ஹிய்யா கொடுக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. வசதியுள்ளவர்கள் அனைவரும் கொடுக்க வேண்டும். ஒட்டகம் அல்லது மாடாக இருந்தால் ஏழு பேர் சேர்ந்து கூட்டாக கொடுக்கலாம். இது ஆண்களுக்கு மட்டும்தான் என்பதில்லை. பெண்களும் தாராளமாக இதில் பங்கேற்கலாம். உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது மிகவும் சிறந்தது. அப்படி இல்லையென்றால் வேறொருவருக்குப் பொறுப்புக் கொடுக்கவும் முடியும். அவர் அந்த இடத்திற்கு சமூகமளிப்பது சிறந்தது. தைரியமிருந்தால் பெண்களும் அறுக்கலாம். அறுப்பதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட வேண்டும். நாம் அறுக்கின்ற போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூற வேண்டும்.
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கின்ற நிலையில் துல்ஹஜ் மாதம் பிறந்ததும் நகம், முடி எதையும் வெட்ட வேண்டாம்” (முஸ்லிம்). ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கும் நிலையில் நகம் அல்லது முடி ஏதாவது ஒன்றை வெட்டினால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.
உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுகையில் பிற சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாழ்படுத்தாத வகையில் அதை நிறைவேற்றுவது முக்கிய அம்சமாகும் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. நம் மதக் கிரியைகளை நிறைவேற்றும் போது பிற மதத்தினரின் அதிருப்தியையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்வது நல்லதல்ல. இன்று எமது நாட்டில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கான எதிர்ப்பு பெரியளவில் இல்லாது போனாலும் ஆங்காங்கே சிறுகச் சிறுக அதிருப்தியும் முகச் சுளிப்பும் அண்மைக்காலமாக உணரப்பட்டு வருகின்றன.
மிருகங்களை அறுப்பதற்கும் இறைச்சியைப் பெற்றுகொண்டு சுற்றாடலுக்கு மாசு ஏற்படாதவகையில் கழிவுப்பொருட்களை அழித்தொழிப்பதற்கும் போதிய இடவசதி இருக்கும்வரை இந்த நடைமுறையில் பிரச்சினைகள் தலைதூக்குவதில்லை. பல்லின மக்களும் கலந்து வாழும், இடப்பற்றாக்குறை நெருக்கடி மிக்க பகுதிகளில் மிருகங்களை அறுப்பதும், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் எப்போதுமே சர்ச்சைக்குரியனவாகின்றன.
அல்லாஹ் படைத்த எந்த மிருகத்தையும் (ஆகுமாக்கப்பட்டதை) அறுத்து உண்பதில் எந்தத் தவறும் கிடையாது. உழ்ஹிய்யா கொடுக்கும் விடயத்தில் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மிருகங்களை அறுப்பதற்காக கொண்டுசெல்லும் போது அதற்கு இம்சை செய்வதோ, அறுத்ததன் பின் இரத்தம் வடியும் நிலையில் பாதைகளில் இறைச்சியைத் தூக்கிச் செல்வதோ கூடாது. அறுத்த பிராணியின் கழிவுகளான தோல், எலும்புகள், கொம்பு, சாணம் போன்றவற்றை துர்நாற்றம் வீசும் நிலையில் பாதையோரங்களில் வீசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவைகளை குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும். ஆனால் நம் சகோதரர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிடுகின்றனர். இது கவலைக்குரிய விடயமாக உள்ளது. இது போன்ற தவறுகளை விடுவதால்தான் பிற சமூகத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதை உழ்ஹிய்யா கொடுக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவது கட்டாயக் கடமையாகும்.
எமது நாட்டின் இறைச்சிக் கடைகள் தொடர்பான உள்ளூராட்சி அமைப்புகளுக்கான கட்டளைச் சட்டம் அமுலில் உள்ளதோடு அதன் பிரகாரம் இறைச்சியின் பொருட்டு கால்நடைகளைக் கொல்வதற்குப் பாதுகாப்பான கொள்கலன்களிலேயே அறுக்கப்பட வேண்டும் என்ற நியதியும் உண்டு. உழ்ஹிய்யாவின் பொருட்டு மிருகங்களை அறுப்பதற்காக அவ்வப் பிரதேச உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் பேசி, அதற்காக செலுத்த வேண்டிய சிறு கட்டணங்களையும் செலுத்தி, பாதுகாப்பான முறையில், சுற்றாடலுக்கும் சுற்றாடலிலுள்ள பிற சமூகத்தவர்களுக்கும் தொந்தரவில்லாதவாறு இக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.
இறைச்சிக்காக ஆடு, மாடுகளை கொல்வது எமது நாட்டு சட்டத்தால் தடுக்கப்பட்ட விடயமல்ல என்பதை பிற மதத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உணவுக்காக கால்நடைகளை கொல்வது மிருகவதை என்று சில கொள்கைப் பிரிவினர்கள் வாதாடுகின்றனர்.
ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார கொள்கைச் சுதந்திரங்களும் இன்னும் ஒருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்களில் ஒன்றாகும். இதை அல்லாஹ்தான் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபான்மையினராகிய நாம் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து புரிந்துணர்வுடனும் சகிப்புத் தன்மையுடனும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவோம்.
எமது நாட்டில் உழ்ஹிய்யா சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் நிம்மதியாகவும் மன சந்தோஷத்துடனும் உழ்ஹிய்யா கொடுக்கும் நிலைமை ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!
கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்



No comments:
Post a Comment