போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞனுக்கு 27 வயதும், யுவதிக்கு 28 வயது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நோக்கி இவர்கள் செல்லவேண்டிய எதிஹாட் விமான சேவையின் EY-279 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அதன்போது இவர்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும், இந்த இளைஞனிடம் இருந்த போலி விசாவும் கண்டுபிடிக்கப்பட்டது.
யுவதியின் வீசா தொடர்பில் குடியகழ்வு அதிகாரி வினவிய போது அவர் மௌனமாக இருந்துள்ளார். இதன் காரணமாக அங்கு பெண் குடிவரவு அதிகாரி வரவழைக்கப்பட்டு யுவதியின் உடலை பரிசோதித்த போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலிய வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு போலி கடவுச்சீட்டுகளின் உண்மையான உரிமையாளர்களான புறக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் ஏற்கனவே தங்களுடைய உண்மையான கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை பயன்படுத்தி அந்த விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment