Recent Posts

Search This Blog

அறப்படிச்சி கவுட்டுப்பானைக்குள் வீழ்ந்த கதையாக கல்முனை மாறிவிடக் கூடாது.!

Wednesday, 10 May 2023


நஸீர் ஹாஜிக்கு - முன்னாள் MMC  ஜமால் பதில் 


எத்தனை காலம்தான் ஏமாத்துவாய் இந்த நாட்டிலே என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்ததை நன்கு வாசித்தேன்.


நீங்கள் ஒரு முஸ்லிம் சமுகத்தின் போராளி , தமிழ் இயக்கங்களின், தமிழ் அதிகாரிகளின் அநீதிகளுக்கு எதிராக போராடுபவர் எனக் காட்டிக்கொண்ட நீங்கள் - கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலியின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய முடியாது என்றும் அவரின் இடத்துக்கு வரும் தமிழ் பெண் அதிகாரியை வரவேற்றும் கருத்துக் கூறி வருவதை பார்த்து அதிர்ச்சியே மேலோங்கியது.


உங்கள் கருத்தின்படி - தமிழ் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 5 பிரதிவாதிகள். அந்த 5 இல் 4 பேர் எமது சமுகத்தை சேர்ந்தவர்கள் அல்லர். லியாக்கத் அலி மட்டுமே முஸ்லிம் என சுட்டிக்காட்டியுள்ளமைக்கு முதலில் நன்றி.


முஸ்லிம் ஒருவர் வருவதை இல்லாமலாக்கி தமிழ் அதிகாரி வருவதை வரவேற்றுள்ள உங்களின் போக்கு வழக்கின் தன்மையை எப்படி மாற்றும் என்பதை சிறுபிள்ளை கூட அறியும். தமிழ் அதிகாரியின் வருகை முஸ்லிம் சமுகத்துக்கு நல்லது என்று எந்த நம்பிக்கையில் கூறுகிறீர்கள்?  அதற்கான சத்திய கடதாசியை வழங்குவார் என்று என்ன நம்பிக்கை உங்களிடம் உள்ளது.


தமிழ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துரோகம் இழைக்கிறார்கள் என்று கூறும் நீங்கள் மருதமுனையைச் சேர்ந்தவர் என்பதற்காகவா லியாக்கத் அலி மாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள்.


முஸ்லிம் அதிகாரியின் இடமாற்றத்தை நீங்கள் வரவேற்பதானது - நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோர் கல்முனை முஸ்லிம் சமுகத்தை முட்டாள்களாக்கலாம் என்று நினைக்கிறீர்களா ? உங்கள் நரித்தனத்தை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


அம்பாரை மாவட்டத்தில் 19 பிரதேச செயலாளர் பிரிவுகள்தான் உள்ளன என அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார் என்று கூறிக்கொண்டு உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளுங்கள். கல்முனை விவகாரத்தை ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றதே நீங்கள்தான் என்பதை மக்கள் நன்கு அறிவர்.


உங்கள் பிரபல்யம் , பிழைப்புக்காக 2018 ஜூன் மாதம் வழக்கு தாக்கல் செய்து - அதை வாதாட ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை நியமிக்காமல் இதுவரை - முஸ்லிம் சமுகத்துக்கான பாதுகாப்பை தேடித்தராமல் - 5 வருடங்கள் ஆகியும் அந்த வழக்கில் முஸ்லிம் சமுகத்துக்கு தீர்வை பெறாமல் அதற்கு பதிலாக  அந்த வழக்கின் ஊடாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் பலவீனப்படுத்துகிறீர்கள்.


உங்கள் வழக்கின் ஊடாக பல மறைந்துகிடந்த ஆவணங்கள் உள்நாட்டு அமைச்சு ஊடாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதினால் அதனை அறிந்த சட்டத்தரணி சுமந்திரன்  - குறிப்பாக 1993.07.28 அன்று உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகரிக்கின்றது. அங்கீகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை சுமந்திரன் நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளார்.இது குறித்த ஆவணங்கள் எனது கையில் உள்ளது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


இந்த ஆவணங்களை வைத்தே சுமந்திரன் இப்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கின் ஊடாக கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது மட்டுமன்றி கல்முனையை கைப்பற்றும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.


இது குறித்து லியாக்கத் அலி - வழக்கின் ஆபத்து பற்றி உங்களுக்கும் உங்களை சார்ந்தோருக்கும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட அதனை நீங்கள் அலட்சியப்படுத்தி விட்டு கல்முனை முஸ்லிம்களை திசை திருப்ப முயற்சிக்கின்றீர்கள். கல்முனை பிரதேச செயலக பிரச்சினை என்று ஒன்றில்லை ; வழக்கின் ஊடாக எதுவுமே நடக்காது என்ற மாயையை இப்போது ஏற்படுத்த முயல்கிறீர்கள்.


முஷாரப் எம்பியின் பாராளுமன்ற உரையின் மூலம் கல்முனையின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டது போன்றும் அரசாங்கம் உப பிரதேச செயலகத்தை இழுத்து மூட தீர்மானித்துள்ளது போன்றும் தமிழ் தரப்பு வழக்கின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது போன்றும் முஷாரப் எம்பியின் பேச்சைத்தான் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளுவது போன்றும் ஒரு போலி நம்பிக்கையை கல்முனை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயல்கிறீர்கள்.


நீங்கள் ஆரம்பித்த வழக்குத்தாக்கல் என்ற விளையாட்டு  - இன்று கல்முனை முஸ்லிம்களுக்கு விபரீதமாகி ஆபத்துக்குள் தள்ளியுள்ளது.


நீதிமன்றம் என்பது - ஜனாதிபதி செயலகமோ அமைச்சரவையோ பாராளுமன்றமோ அல்ல அரசியல் வாதிகள் சென்று தீர்ப்பு எடுப்பதற்கு. மேன்முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி கூட தலையிட முடியாது. 21 வது திருத்தத்தின் படி  அது சுதந்திரமான நிறுவனம். அங்கு சரியான ஆவணங்களும் சாட்சியங்களுமே கவனத்தில் கொள்ளப்படும். அந்த நிலையில் எப்படியான தீர்ப்பு வரும் என்பதை இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது.


கல்முனையின் எதிர்காலம் நூழிலையில் தொங்கும் நிலையில் வெட்கமின்றி நீங்கள் - லியாக்கத்தை விட தமிழ் பிரதேச செயலாளர் வழக்கில் நியாயமாக நடப்பார் என்று எப்படி நம்புவீர்கள். இன்னும் சிலர் - புதிய தமிழ் பிரதேச செயலாளர் இரண்டையும் இணைப்பார் என்று மனப்பால் குடித்துக் கொண்டு கூவித் திரிகிறார்கள்.


இவ்வாறுதான் 2012 காலப்பகுதியில் மங்கள என்ற பிரதேச செயலாளரை கொண்டு வந்து இதனை செய்வார் என்று நம்பினோம். இறுதியில் அவர் - உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமிக்க வேண்டும் என்று இரகசிய அறிக்கையை உள்நாட்டு அமைச்சுக்கு சமர்ப்பித்ததை நீங்கள் அறிவீர்களா ? இதற்கு பின்னணியில் டயஸ்போரா இருந்ததை அறிவீர்களா?


அதுமட்டுமின்றி 2017 இல் சம்பந்தனின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் தமிழ் - முஸ்லிம் தரப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அந்த பேச்சில் தமிழ் எம்பீக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 


முஸ்லிம் தரப்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா, ஹரீஸ் வர்த்தகர் சித்தீக் மற்றும் டொக்டர் யூசுப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதன்போது , இரண்டையும் இணைத்து ஒரு தமிழரை பிரதேச செயலாளராக நியமிக்க கோரிக்கை முன்வைத்தபோது அந்த கோரிக்கையை தமிழ் தரப்பு நையாண்டி செய்து நிராகரித்தது.


அதேபோல் , வஜிர அபேவர்த்தன வீட்டில் தமிழ் - முஸ்லிம் தரப்பு ஒருவாரமாக பேச்சு நடத்தியபோதும் சிறு விட்டுக்கொடுப்புக்கும் தமிழ் தலைமைகள் வரவில்லை.இதனை ரிஷாத் பதியுதீனிடம் கேட்டுப் பாருங்கள்.


அவ்வாறு தமிழ் தரப்பு இருக்கும் போது -  கல்முனையில் உள்ள சில நிபுணர்கள் கனவிலும் கற்பனையிலும் தீர்வு எழுதுவதை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.


1989 மே மாதம் அளவில் அன்று பலமான முஸ்லிம் அரசியல் அதிகாரம் இருந்தபோதுதான்  இந்த உப பிரதேச செயலகமும் 29 கிராம சேவையாளர் பிரிவுகளும் உருவாக்கப்பட்டது. இருந்த போதும் அது தொடர்பில் நியாயம் கூற அன்று எவருமே முன்வரவில்லை. 


முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவால் இந்த உப பிரதேச செயலகம் தமிழர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. இந்த உப பிரதேச செயலகத்துக்குள் முஸ்லிம்களின் பஜார், நிலங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் , கிராமங்கள் உள்ளடக்கப்பட்டபோது அன்றிருந்த பலமான முஸ்லிம் அதிகாரம் அதனை தடுக்க முன்வரவில்லை.



 ஆனால் இன்று காழ்ப்புணர்ச்சி , பிரதேசவாதம் கொண்டு எல்லோருடைய கண்களையும் கட்டிவைத்து கல்முனையின் ஆபத்தை மூடிமறைத்து எதிர்கால கல்முனை முஸ்லிம்களின் இருப்பில் குழிதோண்டும் துரோகத்தனத்தில் நீங்களும் இன்னும் சிலரும் ஈடுபடுகின்றீர்கள்.


நஸீர் ஹாஜி அவர்களே ! ஹரீஸ் எம்பியின் கால் தூசிக்கும் நீங்கள் தகுதியற்றவர்.


1993 அமைச்சரவை அங்கீகாரத்துக்கு மாற்றமாக - அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த போது உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியாது என்று மற்றுமொரு அமைச்சரவை தீர்மானத்தை பெற்றுள்ளார். ( 20.08.2018 ) . அதேபோன்று இறுதியாக இருந்த  எல்லை நிர்ணய ஆணைக்குழு, உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியாது  என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக அத்தனை முயற்சிகளையும் எடுத்தவர் ஹரீஸ் எம்பிதான் என்பதை உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.


அதுமட்டுமின்றி , கணக்காளரை நியமிப்பதற்கு தமிழ் எம்பீக்கள் முயற்சித்தபோது கூட அது முடியாமல் போனதன் பின்னனியில் ஹரீஸ் எம்பிதான் உள்ளார். இது போன்று பல விடயங்கள் ஹரீஸால் கல்முனை மண்ணை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உப பிரதேச செயலகம் என்ற பெரிய விடயத்தை அன்று பிரேமதாசா செய்தபோது எமது முஸ்லிம் அரசியல் அதிகாரம் பார்வையாளராகவே இருந்துள்ளது.


எனவே தயவுசெய்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.


ஹரீஸ் எம்பி - பாராளுமன்றத்தில் பேசவில்லை என்று கூறுகிறீர்கள். இதுவொரு கண்கெட்ட பொய். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் எம்பீக்களுக்கு மும்மொழிகளிலும் பல முறை பேசியுள்ளதை நீங்கள் அறிந்திருந்தும் திட்டமிட்டு மறைக்க முயல்கிறீர்கள்.


உங்கள் காழ்ப்புணர்ச்சி - உங்கள் கண்களை மூடுகின்றது. பெருந்தலைவர் அஷ்ரபை ஏமாற்றிய உங்களுக்கு கல்முனை முஸ்லிம்களை ஏமாற்றுவது பெரிய விடயமல்ல.


இறுதியாக கல்முனை முஸ்லிம் மக்களே !

மேன்முறையீட்டு வழக்கின் ஊடாக தமிழ் தேசியம் முஸ்லிம்களின் முகவெற்றிலையான கல்முனையை அடாத்தாக கைப்பற்றலாம் என்ற சூழ்நிலையில் அரசியல் பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு கல்முனை மாநகரத்தை பாதுகாக்க ,  இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு தீர்ப்பும் வராமலிருக்க இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்.


P.T. ஜமால் 

முன்னாள் மாநகர சபை உறுப்பினர்

கல்முனை..



No comments:

Post a Comment