Recent Posts

Search This Blog

முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்புடன் இயங்கும் காங்கேயனோடை பெரிய பள்ளிவாயலின் சிறப்பான நிர்வாகத் திறனை பற்றி அறிந்துகொள்வோம்.

Monday, 17 April 2023


முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்புடன் இயங்கும் காங்கேயனோடை பெரிய பள்ளிவாயலின் சிறப்பான நிர்வாகத் திறனை பற்றி அறிந்துகொள்வோம்.

Article by Feroz Mohammed
Kattankudy

நோன்பு இரண்டாவது தினத்தில் காங்கேயனோடை பெரிய பள்ளிவாயல் நிர்வாகம் மாணவர்களுக்காக நடாத்திவரும் புதுமையான நிகழ்வு ஒன்றை பற்றி பதிவு செய்திருந்தேன்.

இன்றைய தேதிக்கு இலங்கை எங்கிலும் உள்ள 83 பள்ளிவாயல்களில் அதே போன்ற மாணவர்களுக்கான நிகழ்வுகள் இரவு தொழுகைக்கு பின்னர் இடம்பெறுவதற்கு அந்த பதிவு வழிகோலியுள்ளது என்பதாக முகநூல் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

கல்வியாளர்களும் துடிப்பான இளைஞர்களிடமும் ஒரு பள்ளிவாயல் நிர்வாகத்தை ஒப்படைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதாக இருந்தது அந்த பதிவு. ஆனபோதும்
அன்றைய பதிவில் கல்வியை பற்றி 
மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். 

அந்த பள்ளிவாயலை பற்றி எழுத
 ஏகப்பட்ட விடயங்கள் இன்னும் உள்ளன, 
இந்த பதிவில் சிலதை பற்றி அலசுவோம்.

அந்த பெருமைக்குரிய பள்ளிவாயலின்
பெயர் ஜாமிஉல் மஸ்ஜித், காங்கேயனோடை 
கிராமத்தில் இதுவே  பெரிய பள்ளிவாயல். 

25 பேரை கொண்டது அவர்களது பள்ளிவாயல் பரிபாலன சபை, 
இதிலே ..

கல்வி குழு ( Including மதரஸா)
வட்டியில்லா வங்கி நிதியம்
சக்காத் குழு
Maintainance (electric +sound system)
தோட்ட பராமரிப்பு.. என
 ஐந்தாறு குழுக்களாக இயங்கி செயற்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையையும் மேலும் வளப்படுத்தி விடுவதே இதன் நோக்கமாகும்.

மாத இறுதியில் நடக்கும் மத்திய கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும்  பொறுப்பானவர்கள் தத்தமது குழுக்களின் செயற்பாடுகளை முன்னேற்றங்களை பற்றி விவரித்து தெளிவுபடுத்துவர். 

பார்ப்பதற்கு கிட்டத்தட்ட தனியார் கம்பனிகளின் Monthly Regional meeting போன்று இருக்கும். 

கல்வி, பொருளாதாரம், அரசியல் கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படை தளமாக பள்ளிவாயல் இயங்கவேண்டும்  இதனால் மக்களும் தங்களது தேவைகளுக்காக  முதலில் பள்ளிவாசலையே அணுக வேண்டும். அத்தகைய சூழலை ஏற்படுத்திவிட்டால் மக்களின் தொடர்பும் பள்ளியைச் சார்ந்தே இருக்கும்.

புதிய சிந்தனைகள், புதிய திட்டங்கள் சமூகம் சார்ந்த சமகால நெருக்கடிகள்,  என எல்லாமும் பேசப்படும் இவர்களது நிர்வாக சபை கூட்டங்களின் போது.  காரணம் 60 வயதான  மூத்த பிரஜையைகள் இருவர் தவிர மற்றைய நிர்வாகிகள் அனைவரும் 50 வயதுக்கும் கீழ்ட்பட்டவர்கள்.

இவர்களில் தலைவராக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் இரண்டு அதிபர்கள், மூன்று ஆசிரியர்கள், 
மூன்று உலமாக்கள்,  துடிப்பான பதினைந்து இளைஞர்கள், அதிலும் நால்வர் Sales Executives, மற்றும் Maintenance பணிகளுக்கு பொறுப்பாக Computer Hardware technician ஒருவர் என பல்துறை ஆளுமைகளை கொண்ட  ஒரு பொறுப்புள்ள அணியாக இவர்கள் இயங்கி வருகிறார்கள்.

இன்றைய தேதிக்கு புகழ், அதிகாரம், செல்வாக்கு ஆகிய காரணங்களுக்காகவே அநேகமானோர் பொறுப்புகளைப் பெறுவதற்கு ஆசைப்படுகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் நிர்வாக தெரிவின் போது ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி ஒன்றும் பதிவாகி  கவலையான செய்தியாக அமைந்துவிட்டது அனைவருக்கும்.

பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்புகள் என்பது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது  பராமரிப்பு பணிகள் செய்வது நோன்பு காலங்களில் கஞ்சி காய்ச்சுவது ஹஜ் தினங்களில்  கூட்டு குர்பானி கொடுப்பது, மாதாந்தம் சந்தா பணத்தை வசூலிப்பது என்று குறுகிய வட்டத்திற்குள் அமைந்து விடுகிறது அனேக இடங்களில்.

இன்னும் சிலர் மண்டபம் கட்டுவது, கடைகள் கட்டி வருமானத்தை பெருக்குவது போன்றவை தான் பிரதானம் எனவும் கருதிக்கொண்டு இயங்குகின்றனர்.  

இவை அனைத்துமே பள்ளிவாசல் பொறுப்புகளில் நூறில் ஒரு பங்கு தான்,
மீதமுள்ள 99 சதவீதம் சமூகத்தின் நலன் சார்ந்தது. சமூகத்தின் உயர்வு சார்ந்தது. சமூகத்தின் மேம்பாடு சார்ந்தது. உலக மற்றும் மறுமை சார்ந்த வாழ்க்கை கட்டமைப்புடன் தொடர்புடையது என்பதாக எனக்கு தெளிவுபடுத்தினார் அந்த பள்ளிவாயல் தலைவர் ALM. முஜாஹித் விரிவுரையாளர்.

இறைவனை அஞ்சி பொறுப்புகளை அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள் என்பது நபியின் வாக்கு.
 (நூல்: அஹ்மத் (22030)

கற்றறிந்த நல்லதோர் இளம் தலைமுறையை உருவாக்கிட்டால் போதும் மீதியை அவர்கள் வசதிக்கேற்ப அவர்களே வளர்த்துக் கொள்வார்கள் என்பதே இவர்களின் எண்ணம்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளையும், தெரிவு செய்யப்பட்ட இலக்குகளையும்,  நடைமுறைகளோடு இணைக்கச் சரியான வழிகாட்டுதல்களாக கல்வியே உதவுகின்றன.

கல்வியின் நோக்கங்கள் அக் குழந்தைகளின் சமுதாய மேம்பாட்டிற்கு உதவக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் பள்ளிவாயல் பொருளாளர் அஷ்ஷெய்க் அப்பாஸ் நளீமி (அதிபர்)

மோசமான செயல்களை செய்வதற்கும், 
பிற ஏனைய பாவங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவு இல்லாமல் போனதுதான், ஒருவனுக்கு கல்வியறிவு இருந்தால், விபச்சாரம் செய்வது , வட்டியின் கொடுக்கல், வாங்கல் ,கொலை செய்வது, அல்லாஹ்விற்கு இணைவைப்பது ஆகியவைகள் தவறு, பெரும் பாவமான செயல்கள் என்று புரிந்து கொள்வான் என்பதே இவர்களது வாதம். 

ஆதலாலேயே கல்விக்குழு இவர்களின் நிர்வாகத்தில் பிரதானமாக இருந்து வருகிறது. கல்வியை அடுத்து..

அல் அவ்ன் எனும் வட்டியில்லா வங்கி நிதியம் ஒன்றையும்  நாடத்தி வருகிறார்கள்

நுண்கடன் நிறுவனங்களிலும் பைனான்ஸ் கம்பனிகளிலும் அவ்வூர் மக்கள் சிக்கி சீரழிவதை அவதானித்த பின்னர், மக்களை வட்டியிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் ஆரம்பித்ததே வட்டியில்லா வங்கி நிதியம். 
முழு ஊரையும் வட்டியிலிருந்து காப்பாற்ற முடியாவிடினும் அவர்களது மஹல்லா வாசிகளை வட்டியின்பால் செல்வதை முடிந்தளவு குறைத்துவிட்டார்கள்.
இவர்களின் நிதியத்தில் இரண்டு வகையான கடன் திட்டங்கள் உள்ளன.

முதலாவது தங்க நகை அடமானம் வைத்து
அதற்கு ஈடாக பணம் பெறுவது. 
இதனை மீள செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்.

மற்றையது அவசர தேவைகளுக்காக 
10ஆயிரம் ரூபா பெறும் திட்டம்.
இதனை இலகு தவணை முறையில் மாதம் ஆயிரம் ரூபா வீதம் பத்து மாதம் செலுத்தி வந்தாலே போதும்.

இரண்டுமே மகல்லா வாசிகளின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட  திட்டம். பத்து வருடங்களாக நடைபெற்றுவதோடு  
600க்கும் மேற்பட்ட மஹல்லா வாசிகள் இதுவரைக்கும் பலனடைந்திருப்பதாக இதற்கு பொறுப்பான ஆசிரியர் MHM.அஸ்மி தெரிவித்தார்.

இந்த பள்ளிவாயலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில்..

பள்ளிவாயல் சந்தா பணம் பெறுவதற்காக நிர்வாகிகள் யாரும் யாருடைய வீடுகளுக்கும் செல்வதில்லை. 

மக்களுக்கென அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தினத்தில்,  குறிப்பிட்ட நேரத்தில் மஹல்லா வாசிகளே பள்ளி அலுவலகத்தில் வந்து பணத்தை செலுத்திவிடுகிறார்கள். முடியாதவர்களின் வீட்டிற்கு மூன்று மாதங்களின்  பின்னர் நிர்வாகிகள் சென்று பணத்தை அறவிடுகின்றனர். 

மற்றையது..

பள்ளிவாயலுக்கு என வரும் எந்த நன்கொடை பொருட்களையும்  நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யாரும் பெறுவதில்லை, அந்த லிஸ்ட் இல் அவர்களது பெயர்கள் இடம்பெறுவதுமில்லை.
ஆன போதும் இவர்களில் எவருமே செல்வந்தர்களும் இல்லை என்பதே வியப்பான விடயம்.

பள்ளிவாயலுக்கு சொந்தமாக உள்ள
8 கடைகளில்  நிர்வாகிகளாக அங்கம் வகிப்போர் எவரும்  வாடகைக்கு பெறுவதில்லை. இது வக்பு சபையின் சட்டத்திற்கு முரணானது என பதிலளித்தார்
பள்ளிவாயலின் பிரதான இயந்திரமாக செயலாற்றிவரும் ஆங்கில பாட ஆசிரியர்
MYM. நஜிமுதீன் அவர்கள்.

இன்னமும் கூறப்போனால்.

கஞ்சி காய்ச்ச தேவைப்படும் தேங்காயை  (பள்ளி வளாகத்தில் காய்த்த தோல் தேங்காயை உரித்து கொடுக்கும் பணி) கூட நிர்வாக உறுப்பினர்களான நான்கு சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து நகைப்புடன் பேசி மகிழ்ந்து முகம் சுழிக்காமல் இதர வேலைகளையும் செய்து முடிப்பதை  இரவு வேளையில் அதிகம் கண்டிருக்கிறேன்.

வீட்டில் விருந்தோம்பல், கல்யாணம் 
போன்ற நிகழ்வுகளுக்கு சொந்தங்கள் 
ஒன்று கூடி செய்யும் காரியங்கள் போல காட்சியளித்தது எனக்கு. சமையல் கார நாநாவும் நோன்பாளி தான். அவருக்கு சிரமத்தை கொடுக்காது நாங்களே ஓரிரு காரியங்களை ரெடி பன்னி வைத்துவிடுகிறோம் என்றார்கள்.

தறாவீஹ் வேளையில் வழங்கப்படும் தேனீருக்கு பொறுப்பானவர்கள் உயர்தர வகுப்பு மாணவர்கள். கலகலப்பாக இருக்கும்  வேலையும் கச்சிதமாக நடக்கும். தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள்  போல காட்சி இருக்கும் வேலையும் நேர்த்தியாக முடிந்திருக்கும். 

இப்படி எத்தனையெத்தனையோ சேவைகளைச் செய்ய வேண்டிய பொறுப்புகளை கொண்டதே
 "பள்ளிவாயல் நிர்வாகம்" 

இப்படி  எவ்வளவோ சேவைகளைப் பள்ளிவாயல்கள் மூலம் செய்வதற்கு வாய்ப்பிருக்கும்போது அவை எதையும் செய்யாமல் பள்ளிநிர்வாகிகள் காலத்தைக் கடத்துவது இஸ்லாமியச் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்! 

 தலைமை பொறுப்பின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணராது,  கல்வி அறிவு மார்க்க அறிவு ஏதும் இன்றி வெறும் சுயகௌரவத்திற்காக அரசியல் லாபத்திற்காக பதவி வகிப்பவர்கள் எமக்கும்  அடுத்த தலைமுறையினருக்கும் பாரிய அநீதியை இழைத்துவருகிறார்கள் என்பதே உண்மை.

நிர்வாகிகளாக கற்றவர்கள் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை சமூக பொறுப்புடன்  சரியானவற்றை  
எடுத்து நடக்கும் பண்பாடுள்ளவர்கள் இருந்தாலே போதுமானது.

முடியுமான நண்பர்கள் காங்கேயனோடைக்கு  ஒருதடவை 
விஜயம் செய்து பெரிய பள்ளிவாயலின்  நிர்வாகிகளை நேரில் சந்தித்து அளவளாவுங்கள். குறுகிய வளத்தை கொண்டு , மூளை வளத்தை மட்டும் மூலதனமா  வைத்துக்கொண்டு நிறைவான பணியாற்றும் இவர்களை பாராட்டுங்கள். தொடர்புகளை ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் சாதிக்க காத்திருக்கும் உங்களுக்கும் சாமர்த்தியமாக அறிவுறுத்துவார்கள்.


No comments:

Post a Comment