இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து தாம் கூறியதாக ட்விட்டரில் வெளியான கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக அவர் இருப்பதாகவும் நோபல் குழுவின் துணைத்தலைவர் கூறியதாக தகவல் வெளியானது.
தாம் மோடியின் மிக பெரிய ரசிகர் என்றும், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியிடப்பட்டது.
அத்துடன், பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.
அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை தாம் திட்டவட்டமாக மறுப்பதாக நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
நோர்வேயைச் சேர்ந்த நோபல் குழு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும்.
இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகின்றது.
உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை பரிந்துரைக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது



No comments:
Post a Comment