*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்*
இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நூற்றாண்டு விழா, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி (பின்னூரி ) அவர்களது தலைமையில் இடம்பெறுகிறது.
BMICH அரங்கில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டிற்கு இலங்கையின் மேதகு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டிற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆலிம்கள், பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடந்து வந்த வரலாற்றுப் பாதையை தெளிவுபடுத்தி ஜம்இய்யத்துல் உலமா சபையானது மனித நேயமிக்க ஓர் அமைப்பு என்பதை இலங்கை மக்களுக்கு எத்தி வைத்தல் எனும் தொணிப் பொருளில் இம்மாநாடு இடம் பெறுகிறது.
1924 இல் காலியிலுள்ள பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக் கல்லூரியில் தோற்றுவித்ததுதான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை. இதன் முதலாவது தலைவர் பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மர்ஹூம் அஷ்ஷேய்க் அப்துல் ஹமீத் (பஹ்ஜி) ஆவார். ஏறத்தாழ 60 ஆலிம்கள் கலந்து தலைவரை தெரிவு செய்தனர். தற்போது 10000 இற்கும் மேல் அங்கத்தவர்கள் உள்ளனர்.
23 வருட காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி ( பின்னூரி) அவர்கள் திறம்பட தலைமை வகித்து செயற்படுவது ஆரோக்கியமான விடயமாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆரம்ப காலங்களில் ஃபத்வா,பிறை விவகாரம், பொது வழிகாட்டல்கள் போன்ற விடயங்களில் செயற்பட்ட போதிலும் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் தேவையின் தன்மை அதிகரித்த போது பரவலாக சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாத ஓர் அமைப்பாக காணப்படுகிறது.
அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி (பின்னூரி) அவர்களை தலைவராகக் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தற்போதைய செயற்பாடுகளானது முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான அபிப்பிராயங்கள் களைந்தெறியப்பட்டு ஆரோக்கியமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
இன்றைய நூற்றாண்டு விழா அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறோம்.
*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்.*



No comments:
Post a Comment