Recent Posts

Search This Blog

நாடு இருக்கின்ற நிலைமையில் தற்பொழுது உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தேவைதானா?

Sunday, 8 January 2023


இதுவே இன்றைய அரசியல் அரங்கில் பிரதான பேசுபொருளாக இருக்கின்றது.

ஜனாதிபதி அவர்கள் தலைமை தாங்குகின்ற ஐக்கிய தேசிய கட்சியும் ஆளும் கூட்டணியின் பிரதான பங்காளர்களும் தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் அதற்கு தேவைப்படுகின்ற பத்து பில்லியன் ரூபாய்களை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக பல நூறு பில்லியன் ரூபாய்களை அச்சிட்டதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகள் வாழ்க்கை செலாவனி உயர்வடைந்துள்ளதோடு அத்தியாவசிய உணவு மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் நியாயங்கள் கூற ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதேபோன்று ஏற்கனவே சுமார் 4500 பேர அளவில் இருந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலகட்டத்திலே கொண்டுவரப்பட்ட புதிய உள்ளுராட்சி சபை சீர்திருத்த சட்டத்துக்கு அமைய இரண்டு மடங்காக அதாவது சுமார் 8500 பேரளவில் அதிகரித்திருப்பதனால் அரச வளங்கள் பெருமளவில் விரயம் ஆவதாகவும் அந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக மீண்டும் அந்த ஊராட்சி சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருதற்கான ஒரு தேவை இருப்பதாகவும் அவர்கள் தமது பக்க நியாயமாக குறிப்பிடுகின்றார்கள்.

அதேவேளை, தேர்தல் கட்டாயம் நடத்தப்பட்டு ஆக வேண்டும் என்று வலியுறுத்துகின்ற எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் எழுச்சி போராட்ட பங்காளிகளை பொறுத்தவரையிலும் மக்கள் வேண்டி நின்ற ஆட்சி மாற்றம் ஆட்சி முறைமை மாற்றம் என்பவற்றையெல்லாம் ஜனநாயக வழிமுறைகளில் முன் கொண்டு செல்வதற்கு இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என கூறுகிறார்கள்.

நாட்டில் நிதி நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது என்றால் அதற்கான காரண கர்த்தாக்கள் இந்த ஆட்சியாளர்கள் தான், இவர்களதூ ஆட்சியில், ஆட்சி செய்பவர்கள், ஆட்சி முறைமைகளில் எந்த வித மாற்றமும் ஏற்படாத காரணத்தினால் அவர்கள் புதிய மக்களானையை பெற்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்து இந்த நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் எதிர்பார்க்கின்ற ஆட்சி முறைமை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் அதுவே இன்றைய நெருக்கடிகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை பெற்றுத் தரக்கூடிய வழிமுறையாகும் என்றும் வலியுறுத்துகின்றார்கள்.

தேர்தலை நடத்துவதற்கு தேவைப்படுகின்ற 10 பில்லியன் ரூபாய்கள் 2023 ஆம் ஆண்டிற்கான (7000 பில்லியன் மதிப்பீடு) வரவு செலவு திட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்கள்.

நாடு இன்று எதிர்கொண்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு கடன் சுமையை பொறுத்தவரையிலும் பொருளாதார நெருக்கடிகளை பொறுத்தவரையிலும் சர்வதேச நாணய நிதியம் உட்பட உதவி வழங்கும் நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவது அந்த தரப்புகள் எதிர்பார்க்கின்ற ஒரு ஆட்சி கட்டமைப்பு இந்த நாட்டில் ஏற்படுத்தப்படுவதே இன்றைய கட்டாயத் தேவையாகும் அவ்வாறான நிலைமையில் தேர்தலுக்கான செலவினங்கள் ஒரு அத்தியாவசியமான முதலீடாக காலத்தின் தேவையாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மக்கள் ஆணை பெறாது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தரப்பினால் அதிகாரத்துக்கு கொண்டுவரப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதற்கும் இந்த பாராளுமன்றத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்கு கலைக்காமல் இருக்கவும் ஒரு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த மந்திராலோசனை நடாத்துகின்ற அதே வேளை அதற்கான நிதி எங்கிருந்து வரப் போகின்றது என்றும் எதிர் தரப்புகள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட அமைச்சரவையின் கீழ் நாட்டை ஆள வேண்டிய தற்போதைய அரசு கடந்த கால ஆட்சியாளர்களை திருப்தி படுகின்ற விதத்திலே அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கைகளை அதிகரித்து அரச செலவினங்களையும் அதிகரித்து இருப்பதனால் மக்கள் மீதான வரியிருப்புகள் உட்பட ஏனைய சுமைகளும் தற்பொழுது அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் சூறையாடப்பட்ட மக்களது வளங்களை திருப்பி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத இந்த அரசு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பித்து செல்வதற்கு அனுமதி அளித்திருப்பதாகவும் எதிர்த்தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

எனவே அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்து செல்கின்ற எந்த ஒரு நாடாயினும் இறுதித் தீர்வாக மக்களிடம் ஆணை பெற்று ஜனநாயக வழிமுறைகளில் ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகின்ற மரபை நாங்களும் இந்த தேசத்திலே கையாள வேண்டும் அது மக்களுடைய அடிப்படை உரிமையாகும் அந்த ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வதும் காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என்பதனையே எங்களாலும் கூற முடியும்.

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 09.01.2023


No comments:

Post a Comment