Recent Posts

Search This Blog

இலங்கையில் இருந்து 270 km தொலைவில் நிலைகொண்டுள்ள Mandous சூறாவளி, மேலும் வலுவடைந்துள்ளது. தமிழ் நாட்டின் வட கரை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.

Thursday, 8 December 2022


வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த " மாண்டேஸ் " சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து மிகப் பலமிக்க சூறாவளியாக வலுவடைந்துள்ளது . இது தற்பொழுது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 270 km தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்த சூறாவளியானது மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து இன்று நள்ளிரவு அளவில் தமிழ் நாட்டின் வட கரை , புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் பகுதியையும் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்திற்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதுடன் பலத்த காற்றுடன்கூடிய மழையும்பெய்யக்கூடும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும்.
ஆகையினால் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதிக்கும் மற்றும் தென் கடல் பிராந்தியங்களுக்கும் மறுஅறிவித்தல் கிடைக்கும் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

வட மாகாணத்தில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:

Post a Comment