Recent Posts

Search This Blog

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக கட்சியின் பிரதி தவிசாளர் எம். நயீமுல்லாஹ் அறிவிப்பு.

Sunday, 6 November 2022


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தவிசாளர் எம். நயீமுல்லாஹ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். அதே போல் கட்சியின் இளைஞர் விவகார இணைப்பாளர் பதவியிலிருந்து ஏ.எல். தவமும் விலகிக் கொண்டார்.


கட்சியின் 30வது பேராளர் மாநாடு நாளை காலை புத்தளத்தில் நடைபெறவுள்ள நிலையில் இன்று 06.11.2022 கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நடப்பு வருடத்துக்கான நிருவாக உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் கட்டாய அரசியல் அதி உயர் பீட கூட்டத்தின்போது கட்சியின் பிரதி தலைவர்களுள் ஒருவராக அவரது பெயர் பிரேரிக்கப்பட்ட போதே மேற்படி தனது முடிவை அறிவித்தார்.


கட்சி அங்கத்துவத்திலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருள் இருவரை யாப்பின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாவித்து மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டதாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்ததை தொடர்ந்து தலைவரின் முடிவுக்கு எதிராக தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்த நயீமுல்லாஹ் கட்சியின் நலன் மற்றும் சமூகத்தில் தலைவர் மீதான நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான தலைவரது முடிவு வாபஸ் வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ஒன்றையும் முன் மொழிந்தார். அப்பிரேரணையை கட்சியின் இளைஞர் விவகார இணைப்பாளர் ஏ.எல். தவம் ஆமோதித்தார். பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற கடும் வாத பிரதி வாதங்களின் பின்னர் அவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் தனது தீர்மானத்தை தலைவர் அறிவித்தார்.



அதனை தொடர்ந்து இடம்பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் தெரிவின் போதே நயீமுல்லாஹ், தவம் ஆகியோர் பதவிகளை பொறுப்பேற்க மறுப்புத் தெரிவித்தனர்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் நீண்டகால பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலம் தொட்டு சுமார் முப்பத்து நான்கு வருடங்கள் மூத்த உறுப்பினராகவும் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசியல் அதி உயர் பீட உறுப்பினராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment