சுற்றுலா விசாவின் ஊடாக,
ஓமானுக்கு அழைத்துச் சென்று, அங்கு
கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்து,
மனித கடத்தல்களில் ஈடுபட்டவர் என
குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேகநபர், கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,
சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய
கட்டளையின் பிரகாரம், குடிவரவு மற்றும் குடியகல்வு
திணைக்களத்தின் அதிகாரிகளால் இவர் கைது
செய்யப்பட்டார்.
44 வயதான இவர், ரிஷ்வி மொஹமட் என
அடையாளம் காணப்பட்டார்.
அவர், வத்தளை மற்றும்
தெஹிவளையில் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து
வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.
அவரினால், கொழும்பு மருதானை
பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும்
அனுமதியற்ற வெளிநாட்டு
வேலைவாய்ப்பு முகவர் நிலையம்
மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
முகவர் நிலையங்களின் ஊடாக இளம் யுவதிகளை அவர்,
ஓமானுக்கு சுற்றுவா வீசாவில்
அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின்
மூன்றாவது செயலாளர் என தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டே
இந்த மனித கடத்தல்களில்
அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும்
விசாரணைகளின் ஊடாக
கண்டறியப்பட்டுள்ளது.
அபுதாபி, டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின்
நகரங்களுக்கு விமானத்தின்
ஊடாக சுற்றுலா வீசாவில்
அனுப்பிவைக்கப்படும் இலங்கையைச்
சேர்ந்த இளம் யுவதிகள், அங்கிருந்து
பஸ்களின் ஊடாக ஓமான் நாட்டின்
எல்லைகளுக்கு அழைத்துச்சென்று,
அங்கு இடம்பெறும் பிரசித்த
ஏல விற்பனையில், யுவதியொவர்
10 இலட்சம் முதல் 25 இலட்சம்
வரையிலும் விற்பனைச்
செய்யப்படுகின்றார்.
அதுமட்டுமன்றி விபசாரத்தில்
ஈடுபடுத்தும் கும்பல் மற்றும் ஏனைய
முறைக்கேடான நடவடிக்கைகளில்
ஈடுபடுவோருக்கும் இளம் யுவதிகள்
விற்பனைச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓமானுக்கு
விரைந்துள்ள குற்றப்புலனாய்வுப்
பிரிவின் அதிகாரிகள் சிலர்
அங்கு விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்துக்கும் மனித
கடத்தல் வர்த்தகம் தொடர்பில்
முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மனித கடத்தலில் சிக்கிக்கொண்ட
பெரும்பாலான இளம் யுவதிகள்,
அபுதாபி, டுபாய் மற்றும் ஓமான்
ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை
தூதரகங்களால் நடத்தப்படும்
தடுத்துவைக்கும் மத்திய நிலையங்கள்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிக்கிக்கொண்டவர்களை
நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர், சந்தேகநபருக்கு
எதிராக பல முறைப்பாடுகளை
பெற்றுக்கொள்வதற்கு
எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்,
சனிக்கிழமை (19) அதிகாலை 12.55
மணிக்கு, டுபாயில் இருந்த வந்த
ப்ளைய் டுபாய் விமானச் சேவையின்
எப்.இஸட் 569 ஆம் இலக்க
விமானத்தில் கட்டுநாயக்கவை
வந்திறங்கியதும் கைது
செய்யப்பட்டார்.
அவரை நீர்கொழும்பு நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
பொலிஸார் தெரிவித்தனர்.



No comments:
Post a Comment