83 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஏனைய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் பெரிதும் மாறுபட்ட ஒன்றாகவே கருதப்பட்டது.
அந்த காலப்பகுதியில் கிரிக்கெட்டில் வல்லவர்கள் சூரர்களாக இருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இன்னும் ஒரு அணி உலக கோப்பையை கைப்பற்றுவது சாத்தியமற்ற ஒரு காரியமாகவே நோக்கப்பட்டது.அதுவும் பலரால் மிகவும் சிறுமை கண் கொண்டு நோக்கப்பட்ட ஒரு அணி வெற்றி கோப்பையை பெறுவது என்பது மகா பெரும் சாதனை என்று கூறலாம். இதை underdog வெற்றி என்று குறிப்பிடலாம்.
அதேபோலத்தான் 1996 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளும். கறுப்பான, மெல்லிய சிறு பையன்களை கொண்ட ஒரு அணியினால் உலக உலகத்தரம் வாய்ந்த வீரர்களை வீழ்த்த முடியுமா ? என்ற கேள்விக்குறி பலரிடம் இருந்தது. ஏனென்றால் அதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணி முதல் சுற்று போட்டிகளில் முன்னேறி அடுத்த சுற்றுகளுக்குள் நுழைந்த வரலாறுகளும் இருக்கவில்லை. அத்தோடு ஆஸ்திரேலியா ,மேற்கிந்திய தீவு அணிகள் முதல் கட்ட சுற்று போட்டிகளுக்காக இலங்கைக்கு வருவதையும் கூட நிராகரித்திருந்தார்கள்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒன்று 96 உலகக் கிண்ணப் போட்டிகளில் நிகழ்ந்தது. அதுதான் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை தழுவாமல் கடைசிவரை முன்னேறி மிகப் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி கோப்பையை இலங்கை அணி பெற்றுக் கொண்டது .
அந்த வெற்றியின் முக்கியத்துவம் அன்று இலங்கை அணி underdog என்பதை சுற்றியே கட்டமைக்கப்பட்டிருந்தது.
அதை ஒத்த நீண்ட நாட்களின் பின் கிடைத்த இன்னும் ஒரு underdog வெற்றியே இரண்டு தினங்களுக்கு முன் இலங்கை வெற்றி கொண்ட ஆசிய கோப்பை போட்டிகள்.
இது நாள் வரையும் எந்த ஒரு ஆசிய கிண்ணத்தையேனும் கைப்பற்றியிராத பங்காளதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் "இலங்கையில் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இல்லை" என்று ஏளனமாக குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்ப கட்ட ஆய்வுகளில் இலங்கைக்கான வெற்றி வாய்ப்பு 0% என்றே இருந்தது . முதல் தோல்வியே தொடரப் போகிறது என பலர் எதிர்வு கூறினர். ஈற்றில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை கோப்பையை சுவீகரித்துக் கொண்டது.
பொதுவாக போட்டிகளில் எதிர்பார்த்த அணிகள் அல்லது மிகவும் பலம் வாய்ந்த அணிகள் வெற்றி பெறுவதை விட இவ்வாறான underdog அணிகள் வெற்றி பெறும் பொழுது அதில் ஒரு வித்தியாசமான அழகு ஜொலிக்கின்றது
விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
Underdog ஆக கலந்து கொள்ளும் போது கிடைக்கும் மிகப்பெரிய நன்மைதான் ஏனையவர்களின் எதிர்பார்ப்புகளை,கனவுகளை தோளில் சுமந்து கொண்டு போட்டியிடும் தேவை இருக்காது. அது ஒரு சுதந்திரமான உணர்வை கொடுக்கின்றது.
அதனூடாகவே போட்டியில் முகம் கொடுப்பதற்கான வித்தியாசமான ஒரு பலம் கிடைக்கின்றது.
கடந்த போட்டியில் கூட இலங்கை அணி ஒரு underdog ஆக முகம் கொடுத்ததினால் உச்ச பட்ச சுதந்திரத்தை அனுபவித்த படி அவர்களால் விளையாடக் கூடியதாக இருந்தது .
ஆனால் அதற்கு எதிர் புறமாக பலருடைய எதிர்பார்ப்புகள் எனும் சுமையை தோளில் சுமந்தபடி தான் பாகிஸ்தான் அணி விளையாடி இருக்கின்றது. அதுவே பாகிஸ்தான் அணியை தோல்விக்கு இட்டுச் சென்றது என்றும் கூட கூறலாம்.
பொதுவாக எமது வாழ்வில் நாமும் பலருடைய எதிர்பார்ப்புகளை சுமந்து செல்லும் பொழுது தோல்விகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது.
பெரும்பாலும் புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரம் என்பவற்றின் பின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டவர்கள் உயர் தரத்தில் சோபிக்காமல் போவதை காண்கிறோம். அது அவர்களிடம் திறமையோ, வல்லமையோ இல்லாமையால் அல்ல. அவர்களை சூழ கட்டமைக்கப்பட்ட ஒரு விம்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை சுமந்து கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகரும் பொழுது திண்டாடுகின்றார்கள்.
ஆரம்ப முதலே கெட்டித்தனமாக இருப்பதும்,அதை வைத்து உறவுகள்,நண்பர்கள்,ஊரார் எதிர்ப்பார்ப்பதும் தவறு என்றோ அதன் மூலம் ஒருவரை சாதிக்க தூண்டுவதும் தவறு என்றோ நான் இந்த இடத்தில் கூறவில்லை.
ஆனால் மாணவர்களையோ போட்டியாளர்களையோ அழுத்தத்துக்கு உட்படுத்தி வெற்றியை அடைய சொல்வது புகையிரதப் பாதை போன்றது.இலக்கிற்கான தெரிவுகள் மட்டுப் படுத்தப்பட்டவை.
யாரேனும் அந்தப் பாதையை தவிர்த்து செல்ல நாடினால் அதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.பறவை போல சிறகுகளை கட்டிக் கொண்டு பறக்கவும் முடியும்.
அத்தகையவர்கள் Underdog ஆக சுதந்திரமாக வாழ்வை எதிர்கொள்வது எப்படி என்ற மிகுந்த தெளிவுடனிருக்க வேண்டும்.
திட்டமிடாத ஒரு பாதையில் பயணப்படுகையில் ரசித்திட மட்டுமல்ல, அபாயங்களும் இருக்கலாம். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் புதிய அனுபவங்களை ரசித்த படியே செல்லலாம்.
Fauzuna Binth Izzadeen
13/9/22


No comments:
Post a Comment