முஸ்லிம் சமூகத்தின் விடிவௌ்ளியாக
மிளிர்ந்த அரசியல் பெருந்தகை அஷ்ரஹ்ப்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்,எச்,எம் அஷ்ரஹ்பின் இருபத்திரண்டு வருட இடைவௌிகள், முஸ்லிம் சமூகத்தை நாதியற்ற நிலைக்குத் தள்ளியுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் கவலை தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் அஷ்ரஹ்பின் மறைவுதினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 16) அவர் வௌியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது,
முஸ்லிம்களின் அரசியல் விடிவெள்ளியாக வலம் வந்தவர் மர்ஹூம் எம்,எச்,எம், அஷ்ரஹ்ப். தனது சமூகத்தின் அரசியல் தனித்துவத்தைக் காக்கப்புறப்பட்ட அவரது அரசியல்பாதை, அந்த மாபெரும் தலைவரையே காவுகொண்டு விட்டது. இதனால், 22 வருடங்களாக முஸ்லிம் சமூகம் மேய்ப்பானில்லா மந்தைகள்போல், திக்குத்தடம் தெரியாமல் தடுமாறுகிறது. எத்தனை சவால்கள் எழுந்து மலையாக மோதிய போதிலும், எடுத்த இலட்சியத்தில் அஷ்ரஹ்ப் இலக்குத்தவறியதும் இல்லை. தலைமைக்குள்ள தனிப்பெரும் சிறப்புக்களை அவரிடம் நெருங்கிப்பழகிய காலத்தில் நான் கண்டிருக்கிறேன்.
எல்லோரும் மரணித்தே தீரவேண்டும் என்ற இறை நியதிதான் அவரது மரணத்தில் எம்மை பொறுமை காக்கச் செய்கிறது. பல்லின சமூகங்கள் வாழும் நமது நாட்டில்,சிறுபான்மை முஸ்லிம்களுக்குரிய வகிபாகத்தை மர்ஹூம் அஷ்ரஹ்ப் சரியாகப் புரிந்து வைத்திருந்தார். இந்தப்புரிதல்களை அவரது மறைவுக்குப் பின்னால் உதயமான முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் புரிந்துகொண்டாக கூற முடியாத நிலையே நிலவுகிறது. இதனால்தான்,நமது சமூகம் நாதியற்ற நிலைக்குச் சென்றுள்ளது.
அஷ்ரஹ்பின் இடைவௌியை நிரப்புவதற்கு இன்னுமொரு தலைமை பிறக்கப்போவதும் இல்லை. எனவே,அவர் மரணித்த இந்த நாளிலிருந்தாவது இந்த இடைவௌிகள் ஏற்பட்டதற்கான காரணத்தை அடையாளம் காணும் பொறுப்புக்களை முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல முஸ்லிம் எம்பிக்களும் பொறுப்பேற்க வேண்டியுள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் அந்த மாபெரும் தலைவரை பொருந்திக் கொண்டு நல்ல நிலையில் வைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.



No comments:
Post a Comment