கொழும்பு காலிமுகத் திடல் “கோட்டா கோ கம’வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.
நள்ளிரவைத் தாண்டியதும் அதிகாலை 1.00 மணியளவில் படை நடவடிக்கை ஆரம்பமானது,
போராட்டக்காரர்களும் சில பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதிகள் கொண்டுவவரப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி செயலகப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது,
ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பி.பி.சி. செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத் திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளர். பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
அதிகாலை முதல் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.



No comments:
Post a Comment